தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சியை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விசு மகாஜனிடம் எழுத்தாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமையில் எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், மாவட்ட ஆட்சியர் விசு மகாஜனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சி நடத்துவதன் மூலம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே அறிவுத்திறனை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் விசு மகாஜன், கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும், கருங்குளம் சம்பன்குளம் பகுதியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் எக்ஸ்னரோ நிறுவனம் இணைந்து தூர்வாரும் பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில், கோவில் நகரமாக விளங்கும் அந்தப் பகுதியை மேலும் அழகுபடுத்த வேண்டும் எனவும் எழுத்தாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அங்கு நடைபயிற்சி பாதை மற்றும் படித்துறைகள் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
அதேபோல், தாமிரபரணி ஆற்றில் வளர்ந்துள்ள முள்செடிகளை அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, ஆற்றின் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த சந்திப்பின்போது முனைவர் மணி மொழிச்செல்வன், எழுத்தாளர் மாரிமுத்து, ஆவணப்பட இயக்குநர் அருந்ததி அரசு, கிராம உதயம் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த செல்வின் துரை, ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.