தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் சிரமமின்றி சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை செலுத்தும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் முறையை மாற்றி, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்றி அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாநகர செயலாளர் எம்.எஸ். முத்து வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டு பல ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப் பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஊராட்சிகளில் வசூலிக்கப்படும் பல்வேறு கட்டணங்கள் குறைவாக உள்ள நிலையில், அவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டால் சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் அதிகரிக்கும் நிலை ஏற்படும். இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கூடுதல் நிதிச்சுமையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
குறிப்பாக, தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரி ஏற்கனவே கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், ஆறு மாதங்களுக்கான தொகையை ஒரே நேரத்தில் செலுத்துவது மாத வருமானத்தை நம்பி குடும்பம் நடத்தும் பொது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால் வரி மற்றும் கட்டணங்களை உரிய காலத்தில் செலுத்துவதிலும் சிக்கல் ஏற்படுகிறது.
எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, தற்போது நடைமுறையில் உள்ள ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் முறையை மாற்றி, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்றி அமைக்க வேண்டும்.
இதன் மூலம் பொதுமக்கள் தங்களது வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை சிறு தவணைகளில் சிரமமின்றி செலுத்த முடியும். அதேநேரத்தில் மாநகராட்சிக்கும் வருவாய் சீராக கிடைக்கும். எனவே, பொதுமக்களின் பொருளாதார சுமையை கருத்தில் கொண்டு, சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்றி அமைக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாநகர செயலாளர் எம்.எஸ். முத்து வலியுறுத்தியுள்ளார்.