தூத்துக்குடி குறுக்குச்சாலை கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் நிர்வாகப் பேரவை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி செயலாளர் ஜீவன் ஜேக்கப் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் இளங்குமரன் வரவேற்புரை யாற்றினார்.



விழாவில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி முதல்வர் முனைவர் ரூபா, கல்லூரி முதல்வர் முனைவர் இளங்குமரன் ஆகியோர் இணைந்து குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர்.



விழாவில் பேசிய முனைவர் ரூபா, மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தலைமைப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும், கல்வி, ஒழுக்கம் மற்றும் சமூக சேவையில் பிற மாணவர் களுக்கு முன் மாதிரியாகத் திகழ வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.



முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், “மாணவர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள தலைமைத்துவ வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தி, கல்லூரியின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் நலனுக்கும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.



பதவியேற்பு விழாவில் புதிய மாணவர் பேரவை நிர்வாகிகளாக தலைவராக மாரிலோகேஷ், துணைத் தலைவராக அனுஸ்ரீமா, செயலாளராக சிவமாதேஷ், இணைச் செயலாளராக பரலோக அஸ்மிதா, பொருளாளராக விண்ணரசி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.



மகளிர் பிரதிநிதிகளாக பிருந்தா, சத்யா, உமாமகேஸ்வரி, மாரிச் செல்வி, அகிலன் சண்முகநாதன் ஆகிய மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பொறுப்பேற்றனர். தொடர்ந்து மாணவர் நிர்வாகப் பேரவைத்தலைவர் மாரி லோகேஷ் ஏற்புரை யாற்றினார். செயலாளர் சிவமாதேஷ் நன்றியுரை யாற்றினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.