“எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்; தமிழகம் இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக திகழ வேண்டும்” என்ற தமிழக முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 39 ஆண்டுகளாக நிறைவேறாமல் உள்ள பத்திரிகையாளர் களுக்கான மானிய விலையிலான வீட்டுமனை கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.



ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இருந்து கடந்த 1986-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் தூத்துக்குடி தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. மாவட்டம் உருவாகி 39 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், மாவட்டத் தலைநகரில் பணியாற்றி வரும் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மானிய விலையில் வீட்டுமனை வழங்கும் திட்டம் மட்டும் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது.



இந்த கோரிக்கை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே முன்வைக்கப்பட்டதாகவும், கடந்த 2015-ம் ஆண்டு முதல் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தூத்துக்குடி அருகே உள்ள சேர்வை காரன்மடம் ஊராட்சியில் சுமார் 3 ஏக்கர் 97 சென்ட் நிலம் வீட்டுமனைக்காக ஒதுக்கப் பட்டது. ஆனால், அந்த இடத்திற்குச் செல்லும் முன்பகுதியில் இருந்த நுழைவு வாயில் தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலமாக இருந்ததால், திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.



இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த இடத்தை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டது. பின்னர் அந்த இடத்தை சீரமைத்து வழங்குவதாகவும் உறுதி அளிக்கப்பட்டது.



இதற்கிடையில், தனியாருக்குச் சொந்தமான நிலத்திற்கான தொகையை தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் செலுத்தி, புதுக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆளுநர் பெயரில் பதிவு செய்யப்பட்டது. அதற்கான அசல் ஆவணங்கள் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி, அப்போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இருந்த சந்தீப் நந்தூரியிடம் நேரில் வழங்கப்பட்டன.



அப்போது தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவராக சண்முகசுந்தரம், செயலாளராக பிரபாகரன் ஆகியோர் இருந்து ஆவணங்களை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆறு ஆண்டுகள் கடந்தும் முடிவு இல்லை! மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதன்படி, வீட்டுமனை பெற தகுதியான பத்திரிகையாளர்கள் தொடர்பான பட்டியலும் ஏற்கனவே வழங்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும், இதுவரை தூத்துக்குடியில் பணியாற்றும் ஊடகத்துறையினருக்கு ஒரு கட்டமாகக்கூட வீட்டுமனை வழங்கப்படவில்லை என பத்திரிகையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.



அதேவேளை, நெல்லை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பத்திரிகையாளர் களுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டமாகவும் வீட்டுமனை வழங்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இந்தத் திட்டம் தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.



கடந்த காலத்தில் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற நிர்வாகத்தில் சண்முகசுந்தரம் தலைவராகவும், பிரபாகரன் செயலாளராகவும், சீனிவாசன் பொருளாளராகவும், ராஜேஷ் துணைத்தலைவராகவும், ஜாய்சன் இணைச் செயலாளராகவும் இருந்த காலகட்டத்தில் இந்த கோரிக்கைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.



“ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை” என்ற நிலை நீடிக்காமல், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்த கோரிக்கைக்கு முதலமைச்சர் விஜய் நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தூத்துக்குடி பத்திரிகையாளர் களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழக அரசின் திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் ஆட்சியின் செயல்பாடுகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கியப் பணியை செய்தித்துறை மேற்கொண்டு வருகிறது. ஜனநாயகத்தின் முக்கியத் தூண்களில் ஒன்றாக விளங்கும் ஊடகத்துறையில் பணியாற்றும் பத்திரிகையாளர் களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான வீட்டுமனை கோரிக்கையை அரசு இனியும் தாமதப்படுத்தாமல் நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



“எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதலமைச்சர் விஜய்யின் கொள்கை அறிவிப்புக்கு ஏற்ப, எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர் களின் நலனை பாதுகாக்க வேண்டும். குறிப்பாக, 39 ஆண்டுகளாக நிறைவேறாமல் உள்ள தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.