தூத்துக்குடி மாநகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில் 49-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் வைதேகி பேசுகையில், தனது 49-வது வார்டுக்கு உட்பட்ட 3 சென்ட் பகுதியில் பிளேவர் பிளாக் கற்கள் பதித்து சாலை வசதி ஏற்படுத்திக் கொடுத்ததற்காக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஆணையர் பிரியங்கா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.



தொடர்ந்து, 49-வது வார்டு பகுதியில் தற்போது நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளில் சில பகுதிகளில் சேம்பர் அமைக்கப்படாததுடன், சில வீடுகளுக்கும் இணைப்பு வழங்கப்படாமல் இருப்பதாக தெரிவித்தார்.



இதனால் அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப் படுவதாகவும், விடுபட்டுள்ள பகுதிகளில் சேம்பர் அமைத்து, வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்புகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்.



இதற்கு பதிலளித்த மேயர் ஜெகன் பெரியசாமி, விடுபட்டுள்ள பணிகளை ஆய்வு செய்து, கூடிய விரைவில் பாதாள சாக்கடை பணிகளை முழுமையாக முடித்து பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தார்.



49-வது வார்டில் சாலை வசதி நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவித்ததுடன், நிலுவையில் உள்ள பாதாள சாக்கடை பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என கவுன்சிலர் வைதேகி முன்வைத்த கோரிக்கை, அப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் தொடர்பான முக்கிய கோரிக்கையாக அமைந்தது.