தூத்துக்குடி மாநகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சியின் 18-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீனிவாசன் என்ற ஜான், தனது வார்டு மற்றும் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.



அவர் பேசுகையில், ராஜகோபால் நகர் மற்றும் ஹவுசிங் போர்டு பகுதியில் விகாஷா பள்ளி அருகே தார் சாலை அமைத்து தர வேண்டும் என்றும், ஆர்.கே. கார்டன் மற்றும் ராஜகோபால் நகர் பகுதிகளில் புதிய தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.



மேலும், ராஜகோபால் நகரில் விடுபட்டுள்ள பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதேபோல், நிகிலேஷ் நகர் பூங்காவை புதுப்பித்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சிறப்பாக அமைத்து தர வேண்டும் என்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார்.



இதனிடையே, நிகிலேஷ் நகர், காந்திநகர், ஹரிராம் நகர் மற்றும் ஆர்.கே. கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் தரமான தார் சாலை அமைத்துக் கொடுத்ததற்காக, அப்பகுதி பொதுமக்கள் சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமிக்கு கவுன்சிலர் சீனிவாசன் என்ற ஜான் நன்றி தெரிவித்தார்.



பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை மாநகராட்சி கூட்டத்தில் முன்வைத்து வரும் கவுன்சிலர் சீனிவாசன் என்ற ஜானின் பேச்சு, 18-வது வார்டு மக்களின் எதிர்பார்ப்புகளை மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக அமைந்தது.