தூத்துக்குடி மாநகராட்சியின் மாதாந்திர சாதாரணக் கூட்டம் இன்று காலை மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சியின் 50-வது வார்டு திமுக கவுன்சிலர் சரவணகுமார், தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.



அப்போது அவர் பேசுகையில், ஸ்ரீராம் நகரில் தெருவாரியாக பெயர்ப்பலகைகள் அமைத்து கொடுத்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தார். மேலும், சாந்தி நகர் 4-வது தெருவில் விடுபட்டுள்ள சாலையை அமைத்து தர வேண்டும் என்றும், குடியிருப்பு பகுதிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் பிரணவ் அவென்யூ பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.



அதேபோல், கணேசன் காலனி மற்றும் என்ஜிஓ காலனி பகுதிகளில் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். கிருபை நகர் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் குடிநீர் விநியோகத்தை, மேற்குப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு மாற்றி அமைத்து சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்றும் மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொண்டார்.



மேலும், அமுதா நகர் பகுதியில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பயன் பாட்டிற்காக புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் அமைத்து தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மாநகராட்சி கூட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை முன்வைத்து கவுன்சிலர் சரவணகுமார் தொடர்ச்சியாக பல்வேறு கோரிக்கைகளை எடுத்துரைத்தது குறிப்பிடத்தக்கது.