தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த ஒரு மாதமாக மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வரும் நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் சார்பில் வியாபாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களிடம் நிதி வசூல் செய்யப்படுவதாக எழுந்துள்ள புகார் வியாபாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வரும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரியங்கா அறிவித்துள்ளார். இதற்காக மாநகராட்சியின் நான்கு மண்டலங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அதிகாரிகளின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள், அந்தந்த மண்டலங்களுக்கு உட்பட்ட தொழில் நிறுவனங்கள், ஏஜென்சிகள் மற்றும் மொத்த வியாபாரிகளை அணுகி, ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கு மரக்கன்றுகளுடன் கூண்டுகள் உள்ளிட்ட பொருட்கள் தேவைப் படுவதாகவும், அதற்காக நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருவதாக வியாபாரிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் என அதிகாரிகள் கடுமையாக வலியுறுத்தி வசூல் செய்து வருவதாகவும், இதனால் வியாபாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த காலங்களில் ஹைமாஸ் விளக்குகள் உள்ளிட்ட பணிகளுக்காக வியாபாரி களிடம் நிதி திரட்டப்பட்டபோது, நிதியுதவி செய்தவர்களுக்கு மாநகராட்சி சார்பில் சான்றிதழ்கள் வழங்கப் பட்டதாகவும், தற்போது மரக்கன்று நடும் திட்டத்திற்காக நிதி வசூலிக்கப்படுவதற்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து வியாபாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் சென்றுள்ளதாகவும், இருப்பினும் அதிகாரிகள் தொடர்ந்து வசூல் நடவடிக் கையில் ஈடுபட்டு வருவதாகவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த நான்கு ஆண்டுகளில் மாநகராட்சி பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு இடங்களிலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது புதிதாக ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது ஏன்? என்றும் வியாபாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் அந்தந்த மண்டலத் தலைவர்களின் பெயர்களும், மரக்கன்றுகள் நடப்படும் பகுதிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் சில மாமன்ற உறுப்பினர்களும் மாநகராட்சி ஆணையரின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பும் நிலை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் திட்டத்திற்காக மாநகராட்சி அதிகாரிகள் வியாபாரிகள் மற்றும் தொழில் நிறுவனங் களிடம் மேற்கொண்டு வரும் நிதி வசூல் நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். வசூல் நடவடிக் கையில் ஈடுபட்டதாக கூறப்படும் அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.