தூத்துக்குடி: தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரி மற்றும் என்எல்சி அனல் மின் நிலையம் இணைந்து சமூக நல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இலவச கண் பரிசோதனை முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி செயலாளர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரசஸ், முதல்வர் அருட்சகோதரி முனைவர் சிபானா, துணை முதல்வர் அருட்சகோதரி முனைவர் எழிலரசி, சுயநிதிப் பிரிவு இயக்குநர் அருட்சகோதரி முனைவர் ஆரோக்கிய ஜெனீசியஸ் அல்போன்ஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
முகாமை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: தூய மரியன்னை மகளிர் கல்லூரி தூத்துக்குடியில் நீண்டகாலமாக சிறப்பாக செயல்பட்டு வரும் பழமையான கல்லூரியாகும். இங்கு சுமார் 2,700 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
பட்டப்படிப்பை முடித்த பின்னர் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை பெறும் வாய்ப்பு உள்ளது. வேலைக்குச் சென்றாலும் தொடர்ந்து படிப்பை கைவிடாமல் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கல்வி என்பது யாராலும் பறிக்க முடியாத, விலைமதிப்பற்ற சொத்து.
ஒரு காலத்தில் செல்போன் பயன்பாடு இல்லாமல் கருப்பு-வெள்ளை தொலைக்காட்சி இருந்தது. பின்னர் பட்டன் போன் வந்தது. தற்போது அனை வரிடமும் ஸ்மார்ட்போன் உள்ளது. ஆனால் செல்போனை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து செல்போனை பயன் படுத்துவதால் கண் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
மனிதனின் பார்வைக்கு கண்கள் மிகவும் முக்கியமானவை என்பதால் அவற்றை பாதுகாப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியமும் மிகவும் முக்கியம்.
தற்போது போட்டிகள் நிறைந்த உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம். எனக்குத் தெரிந்த பலர் ஒரு நாளில் நீண்ட நேரம் புத்தகங்களை படித்து தங்களது அறிவை வளர்த்துக் கொண்டுள்ளனர். மாணவிகளும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து தொடர்ந்து முன்னேற வேண்டும்.
நான் ஆரம்பத்தில் 300 மரக்கன்றுகளை நட்டேன். அவை தற்போது நன்றாக வளர்ந்து பயனளித்து வருகின்றன. முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எனக்கு வழங்கிய சிறப்பான வாய்ப்பின் மூலம் தற்போது தூத்துக்குடியில் சுமார் 3 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளேன்.
தூத்துக்குடி மாநகரில் மழைக்காலங்களில் சில பகுதிகளில் 45 முதல் 50 நாட்கள் வரை மழைநீர் தேங்கி, பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக அடுத்தகட்டமாக எண்ட்-டு-எண்ட் சாலை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு தூசி உள்ளிட்ட எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக சாலை வசதிகள் மேம்படுத் தப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரேஸ்புரம் பகுதியில் சாலைகளின் இருபுறமும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு நகரின் அழகு மேம்படுத் தப்பட்டது. ஒவ்வொரு திட்டமாக நடைமுறைப்படுத்தி வருகிறோம். இந்தக் கல்லூரியின் பின்புறமும் அகலமான சாலை அமைக்கப் பட்டு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளன.
மாணவிகளும் தங்களது வீடுகளுக்கு அருகில் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். தருவைகுளம் உரக்கிடங்கில் மரங்கள் வளராது என்று வனத்துறை அதிகாரிகள் கூட தெரிவித்தனர். அதனை நான் ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டேன். அங்கு மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பணியை மேற்கொண்டோம்.
தற்போது அந்தப் பகுதி பசுமைக் காடாக மாறியுள்ளது. அங்கு சுமார் 3 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, அவை நன்றாக வளர்ந்து மரங்களாக காட்சியளிக்கின்றன. மரம் வளராது என்று கூறப்பட்ட இடத்தையே பசுமைக் காடாக மாற்றி சாதித்துக் காட்டியுள்ளேன். இதுபோன்று சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணிகளில் அனைவரும் பங்களிக்க வேண்டும்.
மாணவிகள் படித்து முடித்து எந்த இடத்திற்குச் சென்றாலும் தாங்கள் படித்த கல்லூரிக்கும், தூத்துக்குடி மாநகருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்டு வாழ்க்கையில் அனைத்து வகையிலும் முன்னேற வேண்டும். இவ்வாறு மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.
பின்னர் கண் பரிசோதனை முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மூக்குக் கண்ணாடிகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் இணைப் பேராசிரியர் அனிலா மயிலி, உதவிப் பேராசிரியர் மேரி செல்வி, வட்டச் செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.