தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு கடைகள் அமைக்க அனுமதி வழங்குவது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இதன் அடிப்படையில், சாலையோர வியாபாரிகள் கடைகள் அமைப்பதற்கு மாநகராட்சி சார்பில் குறிப்பிட்ட இடங்களில் அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.



மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா ஆகியோரின் நடவடிக்கையின் அடிப்படையில், அனுமதிக்கப்பட்ட இடங்களில் சாலையோர வியாபாரிகள் தங்களது கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.



மேலும், சாலையோர வியாபாரிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் வகையில் வங்கிகள் மூலம் கடன் பெற்றுத் தருவதற்கான ஏற்பாடுகளும் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டு, பல வியாபாரிகள் வங்கிக் கடன் பெற்றதாக தெரிவிக்கப் படுகிறது.



இந்த நிலையில், மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா உத்தரவின் பேரில் கிழக்கு மண்டல அதிகாரிகள், வி.இ. ரோடு பயர் சர்வீஸ் நிலையம் முதல் சுகம் ஹோட்டல் வரையிலான பகுதிகளில் சாலையின் இருபுறமும் இருந்த கடைகள் மற்றும் ஆக்கிரமிப் புகளை அகற்றும் நடவடிக் கையில் ஈடுபட்டனர்.



இதில், மாநகராட்சி சார்பில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படும் சாலையோர கடைகளும் அகற்றப்பட்டதால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.



இதுகுறித்து சாலையோர வியாபாரிகள் கூறுகையில், “மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் சார்பில் எங்களுக்கு அனுமதி கடிதம் வழங்கப் பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மாநகராட்சி ஒதுக்கிய இடத்தில்தான் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்தோம். தற்போது திடீரென மாநகராட்சி அதிகாரிகள் வந்து எங்களது கடைகளை அகற்றிவிட்டனர்.



இதனால் எங்களது அன்றாட வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அனுமதி வழங்கிய இடத்தில் மீண்டும் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.



மேலும், எங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி மற்றும் தற்போதைய அகற்றும் நடவடிக்கை குறித்து மாநகராட்சி நிர்வாகம் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்” என்றனர்.



மாநகராட்சி சார்பில் அனுமதி வழங்கப்பட்ட இடங்களிலேயே கடைகள் அகற்றப்பட்டுள்ள விவகாரம் சாலையோர வியாபாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. இதற்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய விளக்கம் அளித்து, பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் வாழ்வா தாரத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.