கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி – காலபைரவர் சித்தர் பீடத்தில், தென் தமிழகத்தில் தனிச்சிறப்புடன் அருள்பாலித்து வரும் சிவபெருமான் குருமகாலிங் கேஸ்வரருக்கு ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், வழிபாடுகளும் நடைபெற்றன.
ஆவணி மாத வியாழக் கிழமையும் பௌர்ணமியும் இணைந்த நாளான 27.08.2026 அன்று மதியம் 1.30 மணியளவில் குருமகாலிங் கேஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, குருமகாலிங் கேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றன. பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழிக்கவும், மக்கள் வாழ்வில் வளமும் செல்வமும் பெருகவும் வேண்டி ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி மற்றும் மஹா காலபைரவருக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மஞ்சள், சந்தனம், இளநீர், பால் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வழிபாடுகளின் நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.