சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககத்தின் சார்பில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் சிறப்பு நூலகத்தில் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த 13.08.2026 வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை நூலகத்திற்கு வந்து புத்தகம் வாசித்த வாசகர்களுக்கு, சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘சோற்றுக் கணக்கு’ புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு மன்றம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பேருந்து நிலைய சிறப்பு நூலகர் ஆரோன், புத்தக வாசிப்பு நற்பணி மன்றத் தலைவர் மற்றும் எழுத்தாளர் ஆ. மாரிமுத்து, நெடுஞ்சாலை கவிஞர் செல்வராஜ், தருவைக்குளம் லாரன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு வாசகர்களுக்கு புத்தகங்களை வழங்கி பாராட்டினர்.
முன்னதாக நெடுஞ்சாலை கவிஞர் செல்வராஜ் வாழ்த்துக் கவிதை வாசித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மக்களிடையே அதிகரிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி வாசகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. “புத்தகம் வாசிக்க வாங்க... மக்களே வாங்க!” என்ற வாசகத்துடன் பொதுமக்கள் அனைவரும் பேருந்து நிலைய சிறப்பு நூலகத்தை பயன்படுத்தி, வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தினர்.