நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் செயல்பட்டு வரும் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியில் உதவி செவிலியர் பயிற்சி முடித்த முன்னாள் மாணவிகள், நன்னடத்தைச் சான்றிதழ் பெறுவதற்காக அலுவலகத் திற்கு சென்றபோது அங்கு பணியாற்றும் சில அலுவலகப் பணியாளர்கள் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசுவதுடன், பல்வேறு காரணங்களை கூறி தங்களை அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியில் உதவி செவிலியர் பயிற்சியை முறையாக நிறைவு செய்துள்ள முன்னாள் மாணவிகளிடம், பயிற்சியை நிறைவு செய்ததற்கான சான்றிதழ் மற்றும் டிரான்ஸ்ஃபர் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தபோதிலும், நன்னடத்தைச் சான்றிதழ் வழங்குவதற்கு கூடுதல் ஆவணங்கள் தேவைப்படுவதாக அலுவலகத்தில் தெரிவிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, உதவி செவிலியர் பயிற்சியில் சேர்வதற்கான கவுன்சிலிங் சான்றிதழ் நகல் அல்லது அலாட்மென்ட் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று சில அலுவலகப் பணியாளர்கள் வலியுறுத்துவதாகவும், அந்த ஆவணங்கள் இல்லாத நிலையில் தங்களிடம் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதாகவும் முன்னாள் மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தற்போது அரசு சார்பில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், ஏற்கனவே அரசு மருத்துவக்கல்லூரியில் பயிற்சி பெற்று முடித்த தங்களுக்கு தேவையான சான்றிதழ்கள் இருந்தும் நன்னடத்தைச் சான்றிதழ் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுவது தங்களது வேலைவாய்ப்பையே பாதிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் மாணவிகள் கூறுகின்றனர்.
மேலும், சான்றிதழ் பெறுவதற்காக பலமுறை மருத்துவக்கல்லூரி அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதால், பணம், நேரம் செலவாவதுடன், அலுவலகத்தில் சிலர் நடந்து கொள்ளும் விதம் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்து வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
“தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ஆனால், அரசு அலுவலகத்தில் சில அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நடந்து கொள்ளும் விதம் அந்த அரசுக்கே அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் உள்ளது போல் தெரிகிறது. எங்களுக்கு உரிய சான்றிதழை வழங்குவதில் தேவையற்ற காலதாமதம் ஏற்படுத்தாமல், விதிமுறைகளுக்கு உட்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முன்னாள் உதவி செவிலியர் பயிற்சி மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தங்களைப் போன்ற முன்னாள் மாணவிகள் வேலைவாய்ப்புக்காக விண்ணப்பிக்கும் முக்கியமான காலகட்டத்தில் சான்றிதழ் பெறுவதற்காக அலைக்கழிக்கப்படுவது தொடர்ந்தால், அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியில் முன்னாள் உதவி செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு நன்னடத்தைச் சான்றிதழ் வழங்குவதில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்தி, உரிய விதிமுறைகளின்படி சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாணவிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்வதாக கூறப்படும் புகார்கள் குறித்தும் விசாரணை நடத்தி, தவறு இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர்.