FCRA சட்டம் என்பது இந்தியாவில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளை பொதுவாக கட்டுப்படுத் துவதற்கான சட்டம் அல்ல; வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதி மற்றும் பங்களிப்புகள் முறையாகவும், வெளிப்படையாகவும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான சட்டம் என பா.ஜ. கார்யகர்த்தா டாக்டர் சுதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
FCRA எனப்படும் Foreign Contribution (Regulation) Act சட்டம், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் நன்கொடைகள் மற்றும் பிற பங்களிப்புகள் எந்த நோக்கத்திற்காக பெறப்படுகின்றன, அவை எவ்வாறு பயன்படுத்தப் படுகின்றன, அதற்கான கணக்குகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதை ஒழுங்குபடுத்துகிறது.
இந்தியாவில் செயல்படும் ஒரு NGO-வுக்கு பொதுமக்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட உள்நாட்டு ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் நன்கொடைகள் பொதுவாக FCRA-வின் கீழ் வெளிநாட்டு பங்களிப்பாகாது. ஆனால், அதே அமைப்புக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நிதி கிடைத்தால், அந்த நிதி FCRA விதிகளுக்கு உட்படும்.
உதாரணமாக, ஒரு NGO இந்தியாவில் இருந்து ரூ.20 லட்சம் நன்கொடை பெற்று ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கினால், அது உள்நாட்டு நிதியாகும். அதே அமைப்புக்கு அமெரிக்காவில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் ரூ.50 லட்சம் வழங்கினால், அது வெளிநாட்டு பங்களிப்பாகும். அந்த நிதியைப் பெறவும், பயன்படுத்தவும் சட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
வெளிநாட்டில் இருந்து பெறப்படும் நிதி மருத்துவ உதவி, கல்வி உதவி, பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட சட்டப்படி அனுமதிக்கப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக நிதி பயன்படுத் தப்பட்டால், அது சட்டரீதியான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
வெளிநாட்டு பங்களிப்பைப் பெறும் அமைப்புகளின் தகுதியை ஒழுங்குபடுத்துதல், பதிவு மற்றும் முன் அனுமதி நடைமுறைகளை வகுத்தல், நிதியின் வரவு–செலவு குறித்த கணக்குப்பதிவை உறுதி செய்தல், விதிமீறல்கள் ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்க வழிவகுத்தல் ஆகியவை FCRA-வின் முக்கிய அம்சங்களாகும்.
ஒரு NGO சமூக சேவை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது என்பதற்காக மட்டும் FCRA அந்த அமைப்பை கட்டுப்படுத்துவதில்லை.
வெளிநாட்டு பங்களிப்பை பெறும்போது, அந்த நிதியின் வரவு மற்றும் பயன்பாட்டை சட்டத்தின் கீழ் கொண்டு வருவதே FCRA-வின் நோக்கமாகும். ஒரு அமைப்பின் FCRA பதிவு ரத்து செய்யப்பட்டாலோ அல்லது வெளிநாட்டு நிதி பெறுவதற்கான அனுமதி இல்லாத நிலை ஏற்பட்டாலோ, அந்த அமைப்பின் அனைத்து சமூகப் பணிகளும் தானாகவே சட்டவிரோதமாகிவிடும் என்று அர்த்தமல்ல. வெளிநாட்டு பங்களிப்பைப் பெறுவதற்கான FCRA விதிகளைப் பின்பற்ற முடியாத நிலையே ஏற்படும்.
சட்டப்படி அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு நிதி ஆதாரங்கள் மூலம், பிற சட்டங்களுக்கு உட்பட்டு சமூகப் பணிகளைத் தொடர முடியும். எனவே, FCRA என்பது NGO-க்களை ஒடுக்குவதற்கான சட்டம் அல்ல; வெளிநாட்டு பங்களிப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம். வெளிநாட்டு நிதியின் வரவு, பயன்பாடு, கணக்குப்பதிவு மற்றும் சட்டப்பூர்வத்தன்மையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதே இதன் அடிப்படை நோக்கம். இவ்வாறு டாக்டர் சுதா தெரிவித்துள்ளார்.