தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



மாநகராட்சியின் 60-வது வார்டு உள்ளிட்ட பகுதிகளில் சுழற்சி முறையில் நடைபெற்று வரும் பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்து, அவற்றை துரிதப்படுத்தும் நடவடிக்கைகளில் மேயர் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அண்ணாநகர், கே.வி.கே. நகர் மற்றும் பக்கிள் ஓடை பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய குடிநீர் குழாய் இணைப்பு பணிகளை அவர் நேரில் பார்வையிட்டார்.



மேலும், ஆர்.எஸ்.பி. நகர் குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படும் ஹவுசிங் போர்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீரான குடிநீர் கிடைப்பதில்லை என பொதுமக்களிடமிருந்து வந்த புகாரைத் தொடர்ந்து, அப்பகுதியிலும் மேயர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தாமோதர நகர் மற்றும் சண்முகபுரம் பகுதிகளிலும் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.



ஆய்வின்போது மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது:



“மக்கள் பிரதிநிதிகளாகிய நாம், மக்களுக்கான திட்டங்கள் எந்தவித பாரபட்சமும் இன்றி அனைவரும் பயன்பெறும் வகையில் கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறோம். திட்டங்கள் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் நிலையில், பணிகளின் தரம் மற்றும் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து நேரில் ஆய்வு செய்து வருகிறோம்.



பணிகளில் எந்தவித தவறும் ஏற்படாத வகையில் ஒப்பந்ததாரர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு, பணிகளை தரமாகவும் சிறப்பாகவும் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஒவ்வொரு பகுதிக்கும் ஆய்வுக்காக செல்லும்போதும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைப்பதுடன், பணிகளை எவ்வாறு மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும் என்பதற்கான பல்வேறு ஆலோசனைகளையும் தெரிவிக்கின்றனர்.



பொதுமக்களின் ஆலோசனைகளையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு பணிகளை செயல்படுத்தி வருகிறோம். மக்களுக்கான திட்டங்களும், மாநகராட்சியின் செயல்பாடுகளும் சிறப்பாகவும் முறையாகவும் அமைய வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்” என்றார்.



ஆய்வின்போது பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, சுகாதாரக் குழுத் தலைவர் சுரேஷ்குமார், வட்டச் செயலாளர் ரவீந்திரன், வட்டப் பிரதிநிதி பாலரூபன், குழாய் ஆய்வாளர் பாலு, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.