சுதந்திர காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து, அவர்களின் தியாகத்தை போற்றுவோம் என்று மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.



சுதந்திர தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:



1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் என்றும் நிலைத்து நிற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். நமது புதிய தேசத்தின் உதயத்திற்கான தொடக்க நாளாகவும் இந்நாள் திகழ்கிறது.



இந்தியாவின் சுதந்திரம் என்பது நூற்றுக்கணக்கான தியாகிகளின் உயிர்த்தியாகத்தாலும், ஆயிரக்கணக்கான புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் தொடர் போராட்டங்களாலும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
சுமார் இருநூறு ஆண்டுகளாக அந்நிய ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டிருந்த இந்திய மக்கள், சுதந்திரம் என்ற ஒரே குறிக்கோளுடன் பல்வேறு போராட்டங்கள், புரட்சிகள் மற்றும் கிளர்ச்சிகளை முன்னெடுத்தனர். இதில் பலர் தங்களது இன்னுயிரையும் தியாகம் செய்தனர்.



அவர்களின் தியாகத்தால் கிடைத்த சுதந்திரத்தை நாம் இன்று அனுபவித்து வருகிறோம். எனவே, நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள், புரட்சியாளர்கள் மற்றும் தியாகிகளின் வரலாற்றை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.



மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர். பள்ளி, கல்லூரிகளிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். முப்படைகளின் அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.



ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாளில், நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து, அவர்களின் தியாக உணர்வை போற்றுவோம்.



மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பில், 80-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்திய மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று காயல் அப்பாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.