தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை விலங்கியல் துறை சார்பில் உலகக் கொசு தினத்தை முன்னிட்டு டெங்கு மற்றும் மலேரியா நோய்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



தூய மரியன்னை கல்லூரி முன்பிருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணிக்கு மாநகராட்சி வடக்கு மண்டல சுகாதார ஆய்வாளர் ராஜசேகர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் சிபானா பேரணியைத் தொடங்கி வைத்தார்.
பேரணியில் கலந்து கொண்ட மாணவிகள், “தேங்கும் நீரை அகற்றுவோம்”, “கொசு பெருக்கத்தை தடுப்போம்” உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி, திரேஸ்புரம் பகுதி வரை பேரணியாக சென்றனர்.



தொடர்ந்து திரேஸ்புரத்தில் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா மற்றும் கொசுக்களால் ஏற்படும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. கல்லூரி முதல்வர் முனைவர் சிபானா பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.



தொடர்ந்து “கொசு இல்லா திரேஸ்புரத்தை எவ்வாறு உருவாக்குவது” என்பது குறித்து கல்லூரி முதல்வர் விழிப்புணர்வு உரையாற்றினார். சுகாதாரத் துறை அலுவலரும் கொசு ஒழிப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.



முன்னதாக கல்லூரி முதல்வர் மற்றும் சுகாதாரத் துறை ஆய்வாளர் முன்னிலையில் மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கொசு ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாணவிகள் துண்டுப் பிரசுரங்களில் இடம்பெற்றிருந்த விழிப்புணர்வு வாசகங்களை பொதுமக்களிடம் வாசித்துக் காட்டினர்.



நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள், சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு, மலேரியா தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.