தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் திரேஸ்புரம் பகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்தார். திரேஸ்புரம் பகுதி செயலாளர் நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள், அதிகளவில் உறுப்பினர்களை சேர்த்தல், மக்களோடு மக்களாக இணைந்து மக்கள் பணியாற்றுதல் மற்றும் அடுத்தகட்டமாக நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் கீதாஜீவன் பேசுகையில், “தமிழகத்தின் அனைத்து நலன்களையும் பாதுகாத்து, தமிழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து, மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவது திமுக அரசின் முக்கிய சாதனை களாகும். கலைஞர் ஆட்சி காலம் தொடங்கி தற்போது ஸ்டாலின் ஆட்சி வரை தமிழகத்தின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப் பட்ட சாதனைகளை யாராலும் மிஞ்ச முடியாது.
தமிழர்களின் நலன், தமிழ்நாட்டின் உரிமை, மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை முன்னிறுத்தி செயல் படுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைவதை உறுதி செய்வதுடன், ஒவ்வொரு பகுதியிலும் திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு 75 ஆண்டுகளாக அயராது பாடுபட்டு வரும் இயக்கம் திமுக. தமிழ்நாட்டை ஆட்சி செய்ததன் மூலம் மக்களின் வாழ் வாதாரத்தை உயர்த்தியதும், பொருளாதாரத்தில் தமிழ்நாட்டை முன்னேற்றியதும் திமுக அரசுதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. முத்தமிழறிஞர் கலைஞரின் வழியில் நவீன தமிழ்நாட்டை உருவாக்கி, பொருளாதாரம், தொழில், கல்வி என அனைத்து துறைகளிலும் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்து செல்வது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி.
திமுக அரசின் திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்வது மட்டுமே தற்போதைய தவெக அரசின் பணியாக உள்ளது. ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களை கடந்தும் மாநிலத்துக்கு தேவையான புதிய திட்டங்கள் எதையும் கொண்டுவராமல், தமிழ்நாட்டின் உரிமைகளையும் விட்டுக்கொடுத்து மாநிலத்தை வளர்ச்சியில் பின்னோக்கி கொண்டு செல்வதாக” அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், “அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, கொலை, கொள்ளை, மின்வெட்டு, பாலியல் வன்கொடுமை, லாக்-அப் மரணம், சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாக சீர்கேடு போன்ற பிரச்சினைகள் குறித்து மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். அரசையும் முதல்வர் விஜயையும் விமர்சிப்பவர்களை ஒடுக்குவதாக கூறப்படும் போக்கையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி, உண்மை நிலையை விளக்க வேண்டும்.
ஸ்டாலின் கரங்களை வலுப்படுத்த திமுக செயல் வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களது பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள், உறுப்பினர் சேர்க்கை மட்டுமின்றி மக்கள் பணியிலும் முழுமையாக ஈடுபட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் திமுக முழுமையான வெற்றியை பெற அனைவரும் ஒற்றுமையாகவும், அர்ப்பணிப்புடனும் உழைக்க வேண்டும்” என்று கீதாஜீவன் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் தவெக அரசின் செயல்பாடுகளை கண்டித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாசன், மாநகர துணை செயலாளர்கள் முருகேசன், பிரமிளா, மாவட்ட அணி நிர்வாகிகள் குபேர் இளம்பரிதி, நிக்கோலாஸ்மணி, ஜேசையா, மாநகர அணி நிர்வாகிகள் ரவி, பிரவீன்குமார், டேனியல், வட்டச் செயலாளர்கள் சேகர், சுரேஷ், ரவிச்சந்திரன், அல்பட், கருப்பசாமி, இளங்கோ, டென்சிங், ரோலன்ட், கவுன்சிலர்கள் பவாணி, ஜெயசீலி, மரியகீதா, எடின்டா, ஆறுமுகம், பகுதி அணி அமைப்பாளர்கள் சுரேஷ்குமார், காசிராஜன், மகேஸ்வரி, எமல்டன், வட்டப் பிரதிநிதி பாஸ்கர், முன்னாள் கவுன்சிலர் பாலாஜி, முரளிதரன், மணி, கமலி, செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.