திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பக்கிள் ஓடை திட்டம், தூத்துக்குடி மாநகர மக்களின் மழை வெள்ள பாதிப்பை குறைப்பதில் முக்கிய பங்காற்றி வருவதாகவும், எதிர்காலத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க பக்கிள் ஓடை மேலும் அகலப் படுத்தப்பட்டு வருவதாகவும் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.



தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி தொடர்ந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில், 3-வது மைல் எப்.சி.ஐ. குடோன் பகுதியில் நடைபெற்று வரும் பக்கிள் ஓடை அகலப் படுத்தும் பணியை அவர் ஆய்வு செய்தார்.



பின்னர் அவர் கூறியதாவது:



கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராகவும், மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்தபோது, தூத்துக்குடி மாநகர மக்களின் நலனை கருத்தில் கொண்டு பக்கிள் ஓடை திட்டம் தொடங்கப்பட்டது. 2008-ம் ஆண்டு முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது.



வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்யும் கனமழையால் மாநகராட்சி பகுதிகளில் தேங்கும் மழைநீர் பக்கிள் ஓடை வழியாக கடலுக்கு செல்லும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. கடந்த காலங்களில் பெய்த தொடர் கனமழையின்போது பக்கிள் ஓடையின் குறைந்த அகலம் காரணமாக அதிகளவிலான மழைநீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.



குறிப்பாக 2021-ம் ஆண்டு பெய்த கனமழையின்போது முத்தம்மாள் காலனி, ராம்நகர், பிரையண்ட் நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நேரில் வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.



திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், தூத்துக்குடி மாநகரில் மழை வெள்ள பாதிப்புகளை நிரந்தரமாக தடுக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.



மாநகரில் மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து புதிதாக 14 மழைநீர் வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மழைநீர் விரைவாக வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு பெய்த வரலாறு காணாத கனமழையின்போது பல பகுதிகளில் சுமார் 40 நாட்கள் வரை மழைநீர் தேங்கியிருந்த நிலை இருந்தது.



தற்போது புதிய மழைநீர் வழித்தடங்கள் மற்றும் போர்க்கால நடவடிக்கைகளால், அதுபோன்ற சூழ்நிலையிலும் 10 நாட்களுக்குள் மாநகரை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டுள்ளது.



அடுத்தகட்டமாக, மழைநீர் தடையின்றி கடலுக்கு செல்லும் வகையில் பக்கிள் ஓடையின் அகலம் கூடுதலாக 5 மீட்டர் வரை விரிவுபடுத்தப்படுகிறது. எப்.சி.ஐ. குடோன் முதல் திரேஸ்புரம் கடற்கரை வரை சுமார் 7.5 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்கிள் ஓடையை அகலப்படுத்தி மேம்படுத்த ரூ.5,370 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



இந்தப் பணி ஜனவரி 2026-ல் தொடங்கப்பட்டு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. பணிகள் நடைபெறும் பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்களை மாற்றியமைத்து சீரமைக்கும் பணிகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.



பணிகள் முழுமையடைய குறைந்தபட்சம் மேலும் 8 மாதங்கள் ஆகும். பணிகள் நிறைவடைந்த பிறகு எதிர்காலத்தில் கனமழை பெய்தாலும் மழைநீர் எளிதாக பக்கிள் ஓடை வழியாக கடலுக்கு செல்லும் வகையில் மாநகரின் நீர்வழித்தடம் மேம்படுத்தப்படும்.



சுமார் 30 சென்டிமீட்டர் அளவிற்கு கனமழை பெய்தாலும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.



இவ்வாறு மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். ஆய்வின்போது மாநகராட்சி உதவி பொறியாளர் லெனின், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.