தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ள நிலையில், மாநகரப் பகுதிகளில் தெருக்களில் தேங்கும் குப்பைகளை தினசரி அகற்றுவதற்காக மாநகராட்சி நிர்வாகம் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது. ஆனால், குப்பைகளை அகற்ற வரும் பணியாளர்கள் பொதுமக்களிடம் பணம் கேட்பதாகவும், பணம் வழங்காவிட்டால் குப்பைகளை அகற்றுவதில்லை என்றும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.



இந்நிலையில், தூத்துக்குடி ரோச் காலனி 1-வது தெருவில் கடந்த 3 மாதங்களாக குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குப்பைகளை அகற்றுவதற்காக பணம் கேட்பதாகவும், பணம் வழங்காததால் குப்பைகளை அகற்றாமல் செல்வதாகவும் பொதுமக்கள் தெரிவித் துள்ளனர்.



இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கொசுத் தொல்லை அதிகரித் துள்ளதாகவும், குறிப்பாக குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து குப்பைகளை அகற்ற வரும் பணியாளர்களிடம், “ஏன் குப்பைகளை எடுக்க மறுக்கிறீர்கள்?” என பொதுமக்கள் கேட்டபோது, “நீங்கள் பணம் தரவில்லை; அதனால் குப்பைகளை எடுக்கவில்லை” என பணியாளர்கள் வெளிப் படையாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.



இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, ரோச் காலனி 1-வது தெருவில் கடந்த 3 மாதங்களாக தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றுவதுடன், பொது மக்களிடம் பணம் கேட்பதாக கூறப்படும் புகார் குறித்து மாநகராட்சி நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாநகராட்சி ஆணையர் நேரடியாக தலையிட்டு அனைத்து வார்டுகளிலும் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.