தொழிலாளியும் முதலாளியும் இணைந்து பணியாற்றினால் தான் எந்தத் தொழிலும் நல்ல வளர்ச்சி பெறும் என்று மாநகராட்சி மேயரும், உப்பு பண்டல் கட்டும் தொழிலாளர்கள் சங்கத் தலைவருமான ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட உப்பு பண்டல் கட்டும் தொழிலாளர் களுக்கான கூலி உயர்வு தொடர்பாக உப்பு உற்பத்தி யாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் டூவிபுரத்தில் உள்ள தனபாடு உப்பு ஏற்று மதியாளர்கள் சங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பேசினார்.



அப்போது அவர் கூறியதாவது: எந்த ஒரு தொழிலை செய்தாலும் அதை முறையாகவும், அர்ப்பணிப்புடனும் செய்ய வேண்டும். அப்போதுதான் அந்தத் தொழிலுக்கு உரிய மரியாதையும், அதில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நல்ல வாழ்க்கையும் கிடைக்கும். முதலீடு செய்து தொழில் நடத்தும் முதலாளிகளும், உழைக்கும் தொழிலாளர்களும் அனைத்து வகையிலும் இணைந்து பணி யாற்றினால்தான் அந்தத் தொழில் நல்ல வளர்ச்சியை அடையும்.



தொழிலாளர்களும், முதலாளிகளும் ஒரு தொழிலின் இரண்டு கண்களைப் போன்றவர்கள். உப்பு பண்டல் கட்டும் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று, அதன்படி முடிவு செய்யப்படுகிறது.



அந்த வகையில் தற்போது பருமணி உப்பு பண்டல் ஒன்றுக்கு ரூ.1.20-ம், தூள் உப்பு பண்டல் ஒன்றுக்கு ரூ.1.80-ம் கூலி உயர்வு வழங்க இரு தரப்பினரும் முறையாக பேசி ஒப்பந்த உடன்பாட்டை ஏற்படுத் தியுள்ளனர். அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்.



தூத்துக்குடியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் உப்பு இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது சில மாநிலங்களில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதால் தூத்துக்குடியின் உப்பு தொழில் சற்று குறைந்துள்ளது. மீண்டும் பழைய நிலைக்கு உப்பு தொழில் வளர்ச்சி பெறுவதற்கு என்னால் முடிந்த முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும்.



இவ்வாறு மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். கூட்டத்தில் தனபாடு உப்பு ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் பொன்பாண்டி, செயலாளர் தேன்ராஜ், பொருளாளர் ரெங்கநாதன், உப்பு பண்டல் கட்டும் தொழிலாளர்கள் சங்க செயலாளர் கோட்டுராஜா, திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அந்தோணி கண்ணன், வட்டச் செயலாளர்கள் ரவீந்திரன், சந்திரசேகர், கவுன்சிலர்கள் பச்சிராஜன், முத்துவேல், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள், ஏற்று மதியாளர்கள் சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.