தூத்துக்குடி மாநகராட்சிக் குட்பட்ட 43-வது வார்டு பக்கிள்புரம் 3-வது தெருவில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்த கோனோகார்பஸ் மரத்தை அகற்ற மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.



பக்கிள்புரம் 3-வது தெரு பகுதியில் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் உள்ள கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் கோனோகார்பஸ் மரம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.



குறிப்பாக, இந்த மரம் காரணமாக ஆஸ்துமா, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஹசன், பொதுமக்கள் முன்னிலையில் மரத்தை அகற்ற வேண்டும் என ஆணையர் ப்ரியங்காவிடம் கோரிக்கை விடுத்தார்.



இதையடுத்து, ஆணையர் ப்ரியங்கா உடனடியாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளை அனுப்பி மரத்தை ஆய்வு செய்து, அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.



கடந்த 10 ஆண்டுகளாக அந்த பகுதியில் இருந்த இந்த மரத்தை அகற்ற வேண்டும் என பலமுறை அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், இதுவரை நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், ஆணையர் ப்ரியங்காவிடம் கோரிக்கை விடுத்த உடனேயே அவர் நடவடிக்கை மேற்கொண்டதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.



மரத்தை அகற்ற உத்தரவிட்ட மாநகராட்சி ஆணையர் ப்ரியங்காவுக்கு பக்கிள்புரம் 3-வது தெரு பகுதி பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.