ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீரை ரூ.10 முதல் ரூ.15 வரை விலை கொடுத்து வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 81 கிராமங்கள் உள்ள நிலையில், 69 கிராமங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 1 லட்சத்து 5 ஆயிரம் மக்கள் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் சுமார் 35,500 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.



ஊராட்சியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்க வேண்டுமெனில் சுமார் 95 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப் படுகிறது. கடந்த காலங்களில் மாப்பிள்ளை யூரணி ஊராட்சிக்கு சுமார் 28 லட்சம் லிட்டர் குடிநீர் வந்த நிலையில், தற்போது சுமார் 8 லட்சம் லிட்டர் மட்டுமே வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மங்களக்குறிச்சி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் மாப்பிள்ளை யூரணி பகுதிக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.



ஊராட்சியில் 55 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளன. அவற்றின் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் போதிய அளவு தண்ணீர் கிடைக் காததால், அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



மேலும், மங்களக்குறிச்சி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து மாப்பிள்ளை யூரணிக்கு வரும் பிரதான குழாயின் கொள்ளளவும் சுமார் 18 லட்சம் லிட்டர் அளவிற்கே இருப்பதாக கூறப்படுகிறது. இதுவும் குடிநீர் விநியோகத்தில் தடையாக இருப்பதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.



மாப்பிள்ளையூரணி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அப்பகுதிக்கு தேவையான 95 லட்சம் லிட்டர் குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதாகவும், புதிய குடிநீர் குழாய்கள் அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவிக் கின்றனர்.



ஆனால் அந்தத் திட்டங்கள் தற்போது கிடப்பில் போடப் பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், “10 நாட்களுக்கு ஒருமுறைதான் ஊராட்சியில் இருந்து குடிநீர் வழங்கப் படுகிறது. அதுவும் இரண்டு குடம் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது.



இரண்டு குடம் தண்ணீரை வைத்து குடும்பத்தின் தேவையை எப்படி சமாளிப்பது? ஒரு குடம் தண்ணீருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. ஒரு டிரம் தண்ணீருக்கு ரூ.150 வரை செலவாகிறது. வாரத்திற்கு சுமார் ரூ.500 வரை தண்ணீருக்காக செலவிட வேண்டியுள்ளது. மாதத்திற்கு ரூ.3 ஆயிரம் வரை செலவு செய்கிறோம்” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.



மாப்பிள்ளையூரணி பகுதியில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் தினசரி கூலி வேலை மற்றும் கடல் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருவதால், தண்ணீருக்காக கூடுதல் தொகை செலவிடுவது குடும்பங்களின் பொருளாதார த்தை கடுமையாக பாதிப்பதாகவும் பெண்கள் தெரிவித்தனர்.



மேலும், ஊராட்சியில் குடிநீர் விநியோகப் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டு கின்றனர். இதனை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



“மாற்றம் வேண்டும், மாற்றம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாக்களித்தோம். ஆனால் தற்போது எங்களது நம்பிக்கை சிதைந்துவிட்டது. குடிநீர் போன்ற அடிப்படை தேவைக்காகவே போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக நிரந்தரத் தீர்வு காண வேண்டும்” என்று பெண்கள் வலியுறுத்தினர்.



மாப்பிள்ளையூரணி ஊராட்சியின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், தேவையான அளவு குடிநீர் வழங்கவும், கிடப்பில் உள்ள குடிநீர் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், குழாய் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை முறையாக பராமரிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.