தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக வாசன் கண் மருத்துவ மனையுடன் இணைந்து நடத்தப்பட்ட இலவச சிறப்பு கண் பரிசோதனை முகாம் பத்திரிகையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.



தூத்துக்குடி வி.இ.ரோட்டில் உள்ள வாசன் கண் மருத்துவமனை அலுவலகத்தில் நடைபெற்ற முகாமுக்கு பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் மோகன்ராஜ், துணைத்தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



வாசன் கண் மருத்துவமனை இயக்குநரும், மூத்த கண் மருத்துவருமான டாக்டர் கனிமொழி முகாமை தொடங்கி வைத்து பேசுகையில், “கண் பார்வை அனைவருக்கும் மிகவும் முக்கியமானது. சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவ்வப்போது கண்களை பரிசோதனை செய்து கொள்வது அவசியம். குறிப்பாக குழந்தைகளின் செல்போன் பயன்பாட்டை பெற்றோர்கள் கட்டுப்படுத்த வேண்டும்.



மடிக்கணினி, சமூக வலை தளங்கள் உள்ளிட்ட தொழில் நுட்ப சாதனங்களை தொடர்ந்து நீண்ட நேரம் பார்ப்பதை தவிர்த்து, அவ்வப்போது கண்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும்” என்றார்.



மேலும், தற்போது நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு கண் குறைபாடுகளுக்கு லேசர் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், ஆரம்ப நிலையிலேயே கண் குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை பெறுவது சிறந்தது என்றும் அவர் தெரிவித்தார்.



முகாமில் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத் தினருக்கு பார்வைத் திறன் உள்ளிட்ட பல்வேறு கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டன. மேலும், கண் அறுவை சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.



நிகழ்ச்சியில் பிரஸ் கிளப் கௌரவ ஆலோசகர்கள் அருண், பாலகிருஷ்ணன், அன்பழகன், செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், மாரிராஜா, ராஜன், இருதயராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் காதர் மைதீன், அகமதுஜான், கற்பகநாதன், ராமச்சந்திரன், பாலகுமார், நீத்ராஜன், அருள்ராஜ் உள்ளிட்ட பலர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.



முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்த வாசன் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் நன்றி தெரிவித்தார்.