தூத்துக்குடி வட்டம், மாப்பிள்ளையூரணி வருவாய் கிராமம் சிலுவைப்பட்டி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த இருதயராஜ் மகன் மாதேஷ் (19). இவர் கடந்த 22-ம் தேதி நண்பர்களுடன் புதிய இருசக்கர வாகனத்தில் குற்றாலத்துக்கு சென்றுள்ளார். அப்போது பாவூர்சத்திரம் அருகே ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த மாதேஷ், மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து, அவரது குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அதன்படி, கடந்த 24-ம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் மாதேஷின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன.
தொடர்ந்து, 25-ம் தேதி பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர், மாதேஷின் உடல் மாப்பிள்ளை யூரணி இந்திரா நகரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நடைபெற்ற இறுதிச்சடங்கில், அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் குருசந்திரன், தூத்துக்குடி வட்டாட்சியர் திருமணிஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் மாதேஷின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அவரது உடல் நல்லடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது.
விபத்தில் உயிரிழந்த இளம் வயதிலேயே மாதேஷின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு, பலருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அவரது குடும்பத்தினர் எடுத்த முடிவு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.