அரசியல் விமர்சனங்களுக்கு அரசியல் ரீதியாகவே பதிலளிக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட குடும்பத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது அரசியல் நாகரிகத்தின் எல்லையை மீறும் செயல் என்று தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி மாநகர் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகி அபிஷேக் பொன்சீலன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, சட்டப்பேரவையில் “அப்பா எங்கே, அப்பா எங்கே” என்று தேடினால் எப்படி தெரியும் என்றும், வீட்டுக்குச் சென்று அம்மாவிடம் கேட்டால்தான் அப்பா யார் என்று தெரியும் என்றும் கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. அவரது இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அபிஷேக் பொன்சீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அரசியல் ரீதியாக தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு இருந்தால், அதற்கு அரசியல் ரீதியாக பதிலளிப்பதுதான் ஜனநாயக நடைமுறை. அதைவிடுத்து, குடும்பத்தை தொடர்புபடுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது எந்த வகையான அரசியல் நாகரிகம்? பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு மூத்த அரசியல் தலைவர்.
பொதுவெளியில் தான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை அவர் நன்கு அறிந்திருப்பார். அப்படியிருக்க, அரசியல் விவாதத்தை தனிப்பட்ட குடும்பத்தை நோக்கி கொண்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன? ஒருவர் அரசியலில் தவறு செய்திருந்தால், அந்தத் தவறை விமர்சிக்கலாம். ஆட்சியில் குறைகள் இருந்தால் அவற்றை சுட்டிக்காட்டலாம். கொள்கையில் முரண்பாடு இருந்தால் கேள்வி எழுப்பலாம். இதுதான் ஆரோக்கியமான ஜனநாயக அரசியலாகும்.
முதல்வர் விஜய் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்க அரசியல் ரீதியாக பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் அதற்கு பதிலாக குடும்பத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது பதிலடி அரசியல் அல்ல; அது அரசியல் விவாதத்தின் தரத்தை குறைக்கும் செயலாகும். அரசியலில் கருத்து மோதல்கள் இருக்கலாம். கொள்கை ரீதியாக கடுமையான விமர்சனங்களும் இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட குடும்பத்தை குறிவைத்து பேசுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதேபோன்ற வார்த்தைகளை நயினார் நாகேந்திரனின் குடும்பத்தை நோக்கி வேறு ஒரு அரசியல்வாதி பயன்படுத் தினால், அதை அவர் அரசியல் விமர்சனம் என்று ஏற்றுக்கொள்வாரா? எனவே, அரசியல் களத்தில் தனிப்பட்ட தாக்குதல்களை தவிர்த்து, கருத்துகளுக்கு கருத்துகளால் பதிலளிக்க வேண்டும்.
மேலும், திமுகவைப் பற்றி பேசுவதில் நயினார் நாகேந்திரனுக்கு என்ன பிரச்சினை? எங்கள் அமைச்சர்கள் ஏற்கனவே கூறியதுபோல், திமுக–பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதா? அந்த அன்பின் வெளிப் பாடாகத்தான் நயினார் நாகேந்திரன் திமுகவை விமர்சிக்காமல் வேறு விஷயங்களைப் பற்றி பேசுகிறாரா என்ற கேள்வியும் எழுகிறது.
அரசியலில் வார்த்தைகள் ஆயுதமாக இருக்கலாம். ஆனால் அந்த வார்த்தைகளை எங்கு, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதுதான் ஒரு அரசியல் தலைவரின் முதிர்ச்சியையும் நாகரிகத்தையும் வெளிப்படுத்துகிறது. எனவே, அரசியல் விமர்சனத்தை அரசியல் ரீதியாகவே எதிர்கொள்ள வேண்டும். தனிப்பட்ட குடும்பத்தை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுகளை அரசியல் தலைவர்கள் தவிர்க்க வேண்டும். நயினார் நாகேந்திரன் தனது கருத்துக்கு விளக்கம் அளிப்பதுடன், தவறு இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அபிஷேக் பொன்சீலன் தெரிவித்துள்ளார்.