சுதந்திர தினத்தையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் வகையில், மூவர்ணக் கொடியுடன் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற்றது.



தூத்துக்குடி புதிய மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய இந்த அணிவகுப்பில் 300-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். கைகளில் மூவர்ணக் கொடியை ஏந்தியபடி, நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் “வந்தே மாதரம்”, “பாரத் மாதா கி ஜே” உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பியவாறு சிவன் கோவில் வரை அணிவகுத்துச் சென்றனர்.



நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளையும், நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களையும் நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில், தேசியக் கொடியின் பெருமையும், தேச ஒற்றுமையின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.



மேலும், பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, 2047-க்குள் போதை இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என வலியுறுத்தியிருந்தார். இதனை முன்னெடுக்கும் வகையில், அணிவகுப்பின் நிறைவாக சிவன் கோவில் அருகே “போதை இல்லாத பாரதத்தை உருவாக்குவோம்” என்ற உறுதிமொழியை பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொண்டனர்.



நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராஜேஷ், ஆறுமுகம், செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் சிவராமன், முத்துராமலிங்கம், மாசாணம், இசக்கிமுத்து, காளிராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், நிகழ்ச்சி பொறுப்பாளர்களான வணிக பிரிவு மாவட்டத் தலைவர் செந்தில், வடக்கு மண்டல பிரபாரி சரவணகுமார், சிறுபான்மை அணி மாவட்ட செயலாளர் எம். ஜெயபிரகாஷ், மேற்கு மண்டல துணைத் தலைவர் இசக்கி துரை, மகளிர் அணி மாவட்ட தலைவர் வெள்ளத்தாய், மண்டல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.



“தேசமே முதன்மை; தேசியக் கொடியே பெருமை” என்ற உணர்வுடன் நடைபெற்ற இந்த மூவர்ணக் கொடி அணிவகுப்பு, தூத்துக்குடியில் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு தேசிய உணர்வை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.