தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் நெய்தல் 2026 தூத்துக்குடி கலை விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று (ஆக.15) இரவு வெகு சிறப்பாக நடைபெற்றன. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்று வரும் இவ்விழாவில், பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
நெய்தல் 2026 கலை விழா ஆகஸ்ட் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. தினமும் மாலை 4.30 மணி முதல் நடைபெறும் இந்நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் நாளான நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் முனைவர் சகா. சங்கர் தலைமையிலான சகா கலைக்குழுவின் கலைஞர்கள் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக வழங்கி பார்வையாளர்களை கவர்ந்தனர். அவர்களின் கலை நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்களிடையே உற்சாகமான வரவேற்பு கிடைத்தது.
தொடர்ந்து திருக்கைலாய வாத்தியக் குழு, சென்னை, கணேசமூர்த்தியின் கணியான் கூத்து, சக்தி ஒளி கிராமிய தப்பாட்டக் கலைக்குழு, கயத்தாறு ஸ்டார் குழுவின் கும்மி–கோலாட்டம், குமரி கனகாவின் பறவைகள் காணிக்காரன் நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு கேபர் வாசுகியின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
சகா கலைக்குழுவினரின் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, முன்னாள் அமைச்சர்கள் கீதா ஜீவன், தங்கம் தென்னரசு ஆகியோருடன் கலைஞர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனால் கலைஞர்கள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெய்தல் 2026 விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளை காண தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
பாரம்பரிய கிராமிய கலைகளையும், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளையும் ஒரே இடத்தில் கண்டு ரசித்த பொதுமக்கள், விழா ஏற்பாடுகளை பாராட்டினர்.
இன்று (ஆக.16) நடைபெறும் நிறைவு நாள் நிகழ்ச்சிகளில் தமிழன்டா கலைக்குழு, தமிழோசை பல்சுவை இன்னிசைக் குழு, உவரி களியல் குழு, ஸ்டார் ஜிக்காட்டக் கலைக்குழு, குஜராத் சித்தி கோமா நடனக் குழு மற்றும் சூப்பர் சிங்கர்ஸ் கணபதி–ஹரிப்ரிவ் ஆகியோரின் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.