மீனவர்களுக்கு வழங்கப்படும் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என தேர்தல் பிரசாரத்தின்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்திருந்த நிலையில், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் அதுகுறித்த அறிவிப்பு இடம்பெறாதது மீனவர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக மீனவ பெண்கள் புரட்சிப் பட இயக்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மீனவ பெண்கள் புரட்சிப் பட இயக்கத்தைச் சேர்ந்த டிலைட்டா ரவி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூறியதாவது:
“தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் பிரசாரத்தின்போது மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தற்போது வழங்கப்பட்டு வரும் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையான ரூ.8 ஆயிரத்தை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பை மீனவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரவேற்றனர். குறிப்பாக மீன்பிடித் தடைக்காலத்தில் கடலுக்கு செல்ல முடியாமல் வருமானத்தை இழக்கும் மீனவர் குடும்பங்களுக்கு இந்த நிவாரணத் தொகை பெரும் உதவியாக இருக்கும் என நம்பினர்.

ஆனால் கடந்த வாரம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில், மீனவர்களின் தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.20 ஆயிரமாக உயர்த்துவது தொடர்பாக எந்தவித அறிவிப்பும் நிதியமைச்சரால் வெளியிடப் படவில்லை. தமிழக முதல்வரும் இதுகுறித்து எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை. தேர்தல் பிரசாரத்தின்போது அறிவிக்கப்பட்ட வாக்குறுதியை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி, மீனவர்களுக்கான தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

இந்த அறிவிப்பை மீனவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி வருகின்றனர். தமிழக அரசு உடனடியாக ரூ.20 ஆயிரம் தடைக்கால நிவாரணத்தை அறிவிக் காவிட்டால், மீனவர்கள் ஒன்றுதிரண்டு தமிழக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்” என்று டிலைட்டா ரவி தெரிவித்தார்.