தூத்துக்குடி பொதுப் பணித்துறையின் கட்டிடம் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளை கவனிக்கும் உதவி செயற்பொறியாளராக நல்லசிங்கம் நியமிக்கப்பட்டு சுமார் நான்கு மாதங்கள் ஆன நிலையில், அவரது செயல்பாடுகள் குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



அரசுத்துறைகளில் அதிகாரிகள் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி செயல்பட வேண்டும் என்பதையும், பொதுமக்களின் நலனுக்கு எதிரான செயல் பாடுகள் இருக்கக் கூடாது என்பதையும் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தூத்துக்குடி பொதுப் பணித்துறையில் சில அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இதுகுறித்து சமூக ஆர்வலர் கூறுகையில், எந்த அரசு ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், அரசின் திட்டங்களையும் நடைமுறைகளையும் முறையாக செயல்படுத்த வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது. குறிப்பாக பொதுப்பணித்துறையில் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்வது அதிகாரிகளின் முக்கிய கடமையாகும்.



இந்நிலையில், உதவி செயற்பொறியாளர் நல்லசிங்கம் பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே சில ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து கொடைக்கானல், மூணாறு உள்ளிட்ட இடங்களுக்கு இரண்டு முறை சென்றதாக கூறப்படும் தகவல்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அரசு பணிகளை கண்காணிக்க வேண்டிய அதிகாரி, ஒப்பந்த தாரர்களுடன் இதுபோன்ற பயணங்களில் ஈடுபடுவது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



மேலும், பொதுப்பணித்துறை சார்பில் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படும் பணிகள் தரமாகவும், விதிமுறைகளுக்கு உட்பட்டும் நடைபெறுகிறதா என்பதை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அதிகாரிகளின் செயல்பாடுகள் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டியது அவசியம் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத் தியுள்ளனர்.



ஒரு அதிகாரியின் செயல்பாடு மற்ற அதிகாரிகளுக்கும் முன்னுதாரணமாக அமையும் என்பதால், விதிமுறைகளை மீறும் செயல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் ஆரம்பத்திலேயே உரிய அறிவுரை வழங்குவதுடன், தேவையான ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



தூத்துக்குடி பொதுப்பணித்துறை அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் லஞ்ச ஒழிப்புத்துறையும் ஆய்வு செய்ய வேண்டும். அரசு நிர்வாகத்தில் நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகளின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில், தமிழக அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.