தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 2025–26ஆம் ஆண்டு வரையிலான, அதாவது 31.03.2026 வரையிலான காலத்திற்கான சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை செலுத்தாதவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, நிலுவைத் தொகையை வசூலிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சி ஆணையர் பிரியங்கா உத்தரவின்படியும், கிழக்கு மண்டல உதவி ஆணையரின் அறிவுரையின்படியும், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 24 மற்றும் 47ஆவது வார்டுகளில் உள்ள தெற்கு காட்டன் ரோடு மற்றும் வடக்கு ராஜா பகுதிகளில் மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், குறைந்தபட்சம் 2023–24ஆம் ஆண்டு முதல் அதிகபட்சம் 2018–19ஆம் ஆண்டு வரையிலான காலத்திற்கான சொத்து வரி நிலுவைத் தொகையாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.69 ஆயிரம் வரை செலுத்தாமல் இருந்த 5 கட்டிடங்கள் கண்டறியப்பட்டன. சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்களுக்கு முறையாக கால அவகாசம் வழங்கி அறிவிப்பு அளித்தும், நிலுவை வரியை செலுத்தாததால், அந்த 5 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகளை மாநகராட்சி அலுவலர்கள் துண்டித்தனர்.
குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்கான சொத்து வரி நிலுவைத் தொகையை 3 நாட்களுக்குள் செலுத்தத் தவறினால், நடைமுறையில் உள்ள விதிகளின்படி ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களது கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம், திடக்கழிவு மேலாண்மை வரி, பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரியினங்களையும் நடப்பு காலம் வரை செலுத்தி யுள்ளனரா என்பதை சரிபார்க்க வேண்டும். நிலுவை இருப்பின் உடனடியாக செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் இதர சட்டப்பூர்வ நடவடிக் கைகளைத் தவிர்க்குமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.