தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக கூடைப்பந்து அணி, தென் மண்டல அளவிலான சீனியர் மாநில கூடைப்பந்து போட்டியில் அபாரமாக விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றது. தமிழ்நாடு மாநில கூடைப்பந்து சம்மேளனம் சார்பில் தென் மண்டல சீனியர் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது.



இதில் தமிழகம் முழுவதும் இருந்து 90 அணிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக கூடைப்பந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் தேனி மாவட்ட அணியுடன் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி மோதியது.



ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய தூத்துக்குடி அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 93–47 என்ற புள்ளிக்கணக்கில் தேனி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் தென் மண்டல சீனியர் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி கைப்பற்றியது.



தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தேனி எல்.எஸ். மில் அதிபர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணிக்கு சாம்பியன் கோப்பையை வழங்கினார்.



அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து சிறப்பாக பயிற்சி அளித்த வ.உ.சி. துறைமுக கூடைப்பந்து பயிற்சியாளரும், துறைமுக சபை உறுப்பினருமான துறைமுகம் சத்யாவுக்கு அணியினர் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.



சாம்பியன் பட்டம் வென்ற வ.உ.சி. துறைமுக கூடைப்பந்து அணிக்கு துறைமுக முனையம் ஆணைய தலைவர் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். தென் மண்டல அளவிலான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று தூத்துக்குடிக்கு பெருமை சேர்த்துள்ள வ.உ.சி. துறைமுக கூடைப்பந்து அணிக்கு விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.