தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட முத்தையாபுரம் சுந்தர் நகர், சுந்தரம் நகர், ஜே.எஸ். நகர் உள்ளிட்ட பகுதிகளில் நான்கு நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாதது குறித்து கேட்கச் சென்ற பெண்களிடம், மாநகராட்சி இளநிலை பொறியாளர் செல்வம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதாகவும், கை சைகைகள் மூலம் மிரட்டும் வகையில் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழர் விடியல் கட்சி சந்தனராஜ் பாண்டியன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலாளர் அசன், தமிழ் புலிகள் கட்சி மண்டலச் செயலாளர் தாஸ் ஆகியோர் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்காவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில், பொதுமக்கள் தங்களது அடிப்படை பிரச்சினையான குடிநீர் தொடர்பாக அதிகாரியிடம் முறையிடச் சென்றபோது, அவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளாமல், கை சைகைகள் மூலம் இழிவுபடுத்தும் வகையிலும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் வகையிலும் நடந்து கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ப்ரியங்காவிடம் புகார் தெரிவித்தபோது, பொதுமக்களிடம் அரசு அதிகாரிகள் உரிய மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் புகார் மனுவை விசாரித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்ததாக மனு அளித்தவர்கள் கூறினர்.
மேலும், சம்பவம் தொடர்பான காணொளி ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும், அதனை ஆணையரிடம் காண்பிக்க முயன்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதற்கு ஆணையர், தாங்கள் தெரிவித்துள்ள தகவலை புரிந்து கொண்டதாகவும், பொதுமக்களுக்காக அரசியல் கட்சிகள் போராடுவதை அறிந்திருப்பதாகவும் கூறி, காணொளியை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், தங்களின் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆணையரின் நேர்முக உதவியாளரிடம் சம்பவம் தொடர்பான காணொளி காண்பிக்கப்பட்டதாகவும், அதனை பார்வையிட்ட அவர், ஆணையர் உரிய நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்ததாகவும் புகார் அளித்தவர்கள் கூறினர்.
“பொதுமக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதுடன், அவர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்படும் அதிகாரி மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் பொதுமக்களையும், ஜனநாயக சக்திகளையும் திரட்டி போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை” என்று அவர்கள் தெரிவித்தனர்.
குடிநீர் பிரச்சினையால் அவதிப்பட்டு வரும் பொதுமக்கள் அளித்துள்ள புகாரின் மீது மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.