2026–2027ஆம் கல்வியாண்டிற்கான தூத்துக்குடி நகர்ப்புற அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.



குறிப்பாக, வாலிபால் மற்றும் தடகளப் போட்டிகளில் மாணவிகள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று வெற்றி பெற்று சான்றிதழ்களையும் பெற்றனர். இப்போட்டிகளில் ஜெருஷா, ஜாக்குலின் சாராள், மதனா, காவியா, காருண்யா, பால்வால்ட், பாலதர்ஷினி, திவ்யதர்ஷினி, லக்ஷனா உள்ளிட்ட மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.



மேலும், தூத்துக்குடி மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான கபில் கிளப் வாலிபால் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர். அதேபோல், முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற கபாடி போட்டியிலும் மாணவிகள் சிறப்பாக விளையாடி நான்காம் இடம் பெற்றனர்.



பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகளுக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழ்வழிக் கல்வியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி அபிநயாவுக்கு இந்திய வியாபாரிகள் சங்கம் சார்பில் பரிசுத்தொகை வழங்கி பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.



தொடர்ந்து, பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகள், அவர்களை சிறப்பாக வழிநடத்திய உடற்கல்வி இயக்குநர் மற்றும் ஆசிரியர்களை பள்ளித் தாளாளர் சுதன்கீலர், பள்ளித் தலைமை ஆசிரியர் மெர்லின் பாக்கியவதி உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர். மாணவிகளின் தொடர் வெற்றிகள் பள்ளி மாணவிகளிடையே விளையாட்டு ஆர்வத்தை அதிகரிப்பதுடன், கல்வி மற்றும் விளையாட்டு என இரு துறைகளிலும் விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சிறந்து விளங்குவதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.