தூத்துக்குடி வடபாகம் காவல்துறை மற்றும் சித்தா கிளினிக் இணைந்து நடத்திய மாபெரும் போதை விழிப்புணர்வு மற்றும் இலவச கண், பொது மருத்துவ முகாம் வட்டக்கோவில் அருகே உள்ள சித்தா கிளினிக் வளாகத்தில் நடைபெற்றது.



நிகழ்ச்சிக்கு வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் வேல்ராஜ் தலைமை வகித்தார். டாக்டர் மாரிமுத்து, உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



இதனைத் தொடர்ந்து வாசன் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இலவச கண் மருத்துவ முகாம் மற்றும் பொது மருத்துவ முகாமை காவல் ஆய்வாளர் வேல்ராஜ் தொடங்கி வைத்தார். முகாமில் டாக்டர் ஜீவ அனுசியா தலைமையில் ரத்த வகை பரிசோதனை, இசிஜி பரிசோதனை, ரத்த அளவு பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப் பட்டன.



மேலும், வாசன் கண் மருத்துவமனை மேலாளர் ராமராஜ், வணிக மேலாளர் கார்த்திகேயன் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இணைந்து இலவச கண் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண் மற்றும் பொது மருத்துவப் பரிசோதனைகளை செய்து கொண்டு பயனடைந்தனர். போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், பொது மக்களுக்கு இலவச மருத்துவ சேவையும் வழங்கப்பட்ட இந்த முகாம் பாராட்டைப் பெற்றது.