தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்காக இரவாக இருந்தாலும், பகலாக இருந்தாலும் பணியாற்றுவது எங்களது கடமை என்று கூறி, குடிநீர் பிரச்சினை குறித்து பொதுமக்களிடம் நேரடியாக கேட்டறிய இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வீதி வீதியாக சென்று மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.



தூத்துக்குடி மாநகராட்சிக் குட்பட்ட 60 வார்டுகளிலும் அரசியல் பாரபட்சமின்றி தேவையான அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து வருகிறது. தற்போது சில பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கோடை மழை குறைந்ததன் காரணமாக வல்லநாடு ஆற்றுப்படுகையில் குடிநீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக குடிநீர் பிரச்சினை நீடித்து வருகிறது.



இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தாலும், சில பகுதிகளில் குடிநீர் முழுமையாக கிடைக்கவில்லை என்றும், சில இடங்களில் பாதியளவு மட்டுமே குடிநீர் வருவதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.



இதனையடுத்து மாநகராட்சியின் 19-வது வார்டுக்குட்பட்ட கே.வி.கே. நகர், மகிழ்ச்சிபுரம், பக்கிள் ஓடை ஒட்டிய அண்ணாநகர் மற்றும் 4-வது ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வரவில்லை என பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.



பொதுமக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, மேயர் ஜெகன் பெரியசாமி இரவு நேரத்திலேயே களத்தில் இறங்கினார். இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சுமார் 3 மணி நேரம் இருசக்கர வாகனத்தில் டார்ச் லைட்டுடன் 19-வது வார்டின் பல்வேறு தெருக்களுக்கும் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பொதுமக்களிடம் குடிநீர் விநியோகம் குறித்த விவரங்களை கேட்டறிந்த அவர், பல வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று குடிநீர் வருகிறதா, இல்லையா என்பதையும் கேட்டறிந்தார். அப்போது பொதுமக்களிடம் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, குடிநீர் வராத தெருக்களுக்கு உடனடியாக லாரிகள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், குடிநீர் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வாக லாரி மூலம் தொடர்ந்து குடிநீர் வழங்கப்படும் என்றும், நிரந்தர தீர்வுக்காக புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.



புதிய குழாய் பதிக்கும் பணிகளை ஒரு வாரத்திற்குள் முடித்து குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை பொதுமக்கள் பொறுமையுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், “மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கடமை, இரவாக இருந்தாலும் பகலாக இருந்தாலும் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவதுதான். மாநகராட்சி தொடர்பான எந்த கோரிக்கையாக இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்” என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.



ஆய்வின்போது பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் செல்வின், கவுன்சிலர் கனகராஜ், சோமசுந்தரி, கந்தசாமி, வட்ட செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.