தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.



கல்லூரிக் கல்வி ஆணையர் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் அறிவுறுத்தலின்படி, வ.உ.சிதம்பரம் கல்லூரியின் போதைப்பொருள் தடுப்புக்குழு, நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை (இராணுவம் மற்றும் கடற்படை), இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் சார்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வீரபாகு தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போதைப்பொருள் தடுப்புக்குழு ஒருங்கிணைப் பாளரும், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான செல்வம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.



கல்லூரி முதல்வர் வீரபாகு போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க, கல்லூரியில் பயிலும் சுமார் 850 மாணவ, மாணவியர்கள் மற்றும் 60 பேராசிரியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.



தொடர்ந்து, மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போதைப்பொருட்களுக்கு அடிமையாவதால் ஏற்படும் உடல்நலம், கல்வி மற்றும் சமூக ரீதியான பாதிப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.



நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போதைப்பொருள் தடுப்புக்குழு உறுப்பினர்கள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள், தேசிய மாணவர் படை இராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகள், இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.