சினிமாவில் நடித்த விஜய் தற்போது சட்டமன்றத்தில் முதலமைச்சராக நடித்து வருகிறார் என்றும், சிரிப்பதும் அழுவதும் எங்கே என்று தெரியாத அளவுக்கு அமைச்சர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டு வருவதாகவும் தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாநில ஜெயலலிதா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்தார்.



தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில ஜெயலலிதா பேரவை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமை வகித்தார்.



வடக்கு, தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் மணிகண்டன், மாரியப்பன், சுந்தர், கண்ணன், சுரேஷ்பாபு, முத்துராமலிங்கம், மனுவேல்ராஜ், அமிர்தா மகேந்திரன், முரசொலி மாறன், செல்வராஜ், முத்துச்சாமி, கிருபானந்த முருகன், கருப்பசாமி, நாகேந்திரன், மாரிமுத்து பாண்டியன், பிரதீப், காளிதாஸ், ரத்தினசபாபதி, அந்தோணி சேவியர், மாரியப்பன், சோமசுந்தரம், அமலதாசன், ஜீவா பாண்டியன், வில்சன் பாபு, ஐயப்பன், செண்பகராஜ், பொன்னுத்துரை, வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார், தெற்கு மாவட்ட செயலாளர் வரதராஜ பெருமாள் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.



எடப்பாடியார் முன்கூட்டியே களப்பணியாற்றினார் கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:



தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முக்கியமான கூட்டமாக இந்தக் கூட்டம் அமைந்துள்ளது. அதிமுக வெற்றிக்காக ஓராண்டுக்கு முன்பே தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு, பூத் கமிட்டிகளை அமைத்து களப்பணியாற்றினார். நான் நான்கு தேர்தல்களை சந்தித்து, மூன்று முறை வெற்றி பெற்று அமைச்சராகவும் பணியாற்றியுள்ளேன். கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளில் மூளைச்சலவை செய்து, ஐபோன் மூலம் தகவல்களை பரப்பி, ஒரு வகையான திட்டத்தின் மூலம் விஜய் ஆட்சிக்கு வந்துள்ளார்.



ஆனால் தமிழகத்திற்காக விஜய் என்ன செய்தார்? ஜீவாதார உரிமைப் பிரச்சினை என ஏதாவது ஒரு சாதனை அல்லது தியாகத்தை செய்துள்ளாரா? எதுவும் இல்லை. எடப்பாடி பழனிசாமி அனைவரிடமும் எளிமையாகப் பழகி, அனைவரது கருத்துகளையும் கேட்டறிந்து பணியாற்றினார். உண்மையைச் சொல்பவர்களை அரவணைப் பார். தவறான கருத்துகளை கூறுபவர்களை புறம்தள்ளுவார்.



11 மருத்துவக் கல்லூரிகள் – 7.5 சதவீத இடஒதுக்கீடு நான்கரை ஆண்டுகால ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கியவர் எடப்பாடி பழனிசாமி. 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் மாணவர்களுக்கு மருத்துவக் கல்விக்கான வாய்ப்பை ஏற்படுத்தினார். கொரோனா காலத்தில் நமது குழந்தைகளின் படிப்பு என்னவாகும் என்று பெற்றோர்கள் கவலைப்பட்ட நேரத்தில், அனைவரையும் ஆல் பாஸ் செய்தார். 6 புதிய மாவட்டங்களை உருவாக்கி பல்வேறு சாதனைகளை செய்தார்.



காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு அவமானம் அண்டை மாநிலங்களுடன் பகை ஏற்பட்டாலும் பின்னர் பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பது வழக்கம். ஆனால் மேகதாது அணை மற்றும் காவிரி பிரச்சினையில் விஜய் கர்நாடகா சென்றபோது, அங்குள்ள முதலமைச்சர் சிவக்குமார் வரவேண்டாம் என்று கூறியிருக்கிறார்.



ஒரு முதலமைச்சர் வருகிறார் என்றால் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பது வழக்கம். ஆனால் தமிழக முதலமைச் சருக்கு ஏற்பட்ட இந்த நிலை தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்திற்கே அவமானம்.
நமக்குத் தேவையானது நீதிமன்றத் தீர்ப்பு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தி தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை பெற்றுத் தருவதுதான்.



ஜூன், ஜூலை மாதங்களில் தண்ணீர் வரவில்லை. ஜூலை 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு மூன்று சாகுபடிகள் நடைபெறும் நிலை இருந்தது. தற்போது அது நிறை வேறாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.



சிறப்பு தொகுப்பு வேறு; நிவாரணம் வேறு விவசாயத்திற்கு தேவையான உரம், விதை, உபகரணங்கள் வழங்குவது சிறப்புத் தொகுப்பு. தற்போது வறட்சி ஏற்பட்டுள்ளதால் அதற்கான நிவாரணத்தை வழங்க வேண்டும். சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சியினரும் இதை வலியுறுத்தும்போது, முதலமைச்சர் விஜய் ஏற்கனவே வழங்கிவிட்டோமா என்று கேட்கிறார். சிறப்புத் தொகுப்பு வேறு, நிவாரண உதவி வேறு என்பது கூட தெரியாமல் எதிர்க்கட்சியினர் நாளிதழ்களை நன்றாகப் படிக்க வேண்டும் என்று கூறுகிறார்.



பல லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்த விவசாயிகள் தற்போது குறுகிய வட்டத்திற்குள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் பேசிய விஜய், “எனக்கு இன்னொரு ஜென்மம் இருந்தால் விவசாயியாக பிறக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். ஆனால் இந்த ஜென்மத்திலேயே தமிழகம் போதும் என்ற நிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.



திரிஷா குறித்து பேசுவதுதான் அரசின் முக்கிய வேலையா? 8 கோடி தமிழர்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ள அரசில், பலர் திரிஷாவை பற்றி யாரும் குறை சொல்லக்கூடாது என்று கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்ட பல தலைவர்கள் முதலமைச்சர்களாக இருந்து அலங்கரித்த இடத்திற்கு பல்வேறு மரபுகளும் விதிமுறைகளும் உள்ளன. பொறுப்பில் இருப்பவர்கள் அவற்றை படித்துப் பார்க்க வேண்டும்.



தற்போது தேவையற்ற பல சம்பவங்களால் மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜெபமாலையுடன் பட்ஜெட் தாக்கல் நிதியமைச்சர் மேரி வில்சன் பட்ஜெட் தாக்கலின்போது ஜெபமாலையுடன் வந்து பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கூறியதுபோல், ஜெபமாலைக்குக் கூட மரியாதை இல்லாமல் போய்விட்டது. மீனவர்களுக்கு ரூ.20 ஆயிரம் வாக்குறுதி எங்கே? கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது விஜய் அளித்த வாக்குறுதியில், மீனவர்களுக்கு தடைக்காலத்தில் வழங்கப்படும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.



ஆனால் தற்போது ரூ.7 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறியுள்ளார். தேர்தலுக்கு முன்பு பேசியது வேறு; ஆட்சிக்கு வந்த பிறகு நடந்து கொள்வது வேறு. 35 சதவீத வாக்குகள்; 65 சதவீதம் எதிர்ப்பு தமிழக மக்களுக்காக எந்த உழைப்பும் இல்லாமல் 108 இடங்களில் வெற்றி பெற்றதாகக் கூறுகிறார்கள். அதில் அதிமுகவில் இருந்த 25 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளையும் பெற்றுள்ளனர்.



திமுக கூட்டணிக் கட்சிகளை அழைத்துக்கொண்டு அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். அதிலும் பொதுவுடைமைக் கட்சிகளை முழுமையாக அங்கீகரிக்காமல் நடத்துகின்ற இந்த ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது.



35 சதவீதம் பேர் வாக்களித்துள்ள நிலையில், 65 சதவீதம் பேர் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். “ஜனநாயகன்” படத்தைப் பார்த்து அமைச்சர்களே அழுகின்றனர்! கல்யாண வீட்டில் சிரித்தால் மகிழ்ச்சி. ஒரு படத்தைப் பார்த்துவிட்டு அழுதால் அது இழவு வீடாகத்தானே இருக்க வேண்டும்.



ஆனால் அமைச்சர்கள் முதல் எம்.எல்.ஏ.க்கள் வரை ‘ஜனநாயகன்’ படத்தைப் பார்த்து இந்த நிலையை உருவாக் கியுள்ளனர். கேட்டால், விஜய் நடித்த கடைசி படம் இது என்று கூறுகின்றனர். இத்தனை ஆண்டுகள் சினிமாவில் நடித்துவிட்டு, தற்போது சட்டமன்றத்தில் முதலமைச்சராக விஜய் நன்றாகத்தான் நடித்துக் கொண்டிருக்கிறார்.



“எல்லாவற்றிற்கும் ஆதாரம் காட்ட முடியுமா?” தேர்தல் அறிவிப்புக்கு முன்பு கூறப்பட்ட திட்டங்கள் எதுவும் தற்போது இல்லை. “லஞ்சம் கொடுக்காதீர்கள்; நடப்பது உங்கள் ஆட்சி; விஜய் மாமா ஆட்சி” என்று கூறி வருகின்றனர்.



ஆனால் சட்டமன்றத்தில் முன்னாள் திமுக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் துறையில் 3 சதவீதம் கமிஷன் வாங்கப் படுவதாக குற்றச்சாட்டு கூறுகிறார். அதற்கு ஆதாரம் வேண்டும் என்று கேட்கிறார்கள்.
எல்லாவற்றிற்கும் எல்லாவற்றையும் ஆதாரத்துடன் காட்ட முடியுமா? அது ஒரு வகையான ரூட்டில் சென்று கொண்டிருக்கிறது.



தேர்தலுக்கு முன்பு விஜய் பேசியதும், தேர்தலுக்குப் பின்னர் முதலமைச்சராக அவர் நடந்து கொள்வதும் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. “25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சென்றதை தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள்” 47 அதிமுக எம்.எல்.ஏ.க்களில் 25 பேர் உங்கள் ஆட்சிக்கு துணை சென்றுள்ளனர். இது எந்த வகையில் நியாயம்? இரண்டரை கோடி தொண்டர்களைக் கொண்ட அதிமுகவினர் இதை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.



பேரம், துரோகம் ஆகியவை விஜய் ஆட்சியில் தொடர்ந்து நடைபெறுகின்றன. நீங்கள் வீசிய வலையில் சிக்க முன்னாள் அமைச்சர்கள் பலர் இருந்திருக்கலாம். ஆனால் அதிமுக தொண்டர்கள் யாரும் உங்கள் பக்கம் செல்லவில்லை. எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் இல்லை. என்னைப் போன்ற பலரும் சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டு செல்லாமல் இருப்பதே நல்லது. கேள்விகள் கேட்டு வரும் பதில்களைப் பார்த்தால் நெஞ்சுவலி வந்துவிடும். அந்த அளவில்தான் சட்டமன்றம் நடைபெறுகிறது.



“பெயர் மாற்றம், தலைமைச் செயலக மாற்றம் – இதுதான் சாதனையா?” மூன்று பேருக்கு அரசுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆலோசகர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டும் அரசாணை வெளியிடப்படவில்லை. மாலை 6 மணிக்குப் பிறகு பார்க்க முடியாத முதலமைச்சர் நீங்கள். நீங்கள் பேசுகின்ற வசனங்கள் அனைத்தும் சினிமாவில் பார்ப்பது போலவே இருக்கின்றன.



உங்கள் ஆட்சியின் பட்ஜெட் சாதனை என்று பார்த்தால், பெயர் மாற்றம் மற்றும் முதலமைச்சருக்காக தலைமைச் செயலகத்தை மாற்றுவது ஆகிய இரண்டுதான் உள்ளன. விஜய்யின் “விசில் புரட்சிக்கு” விரைவில் முடிவு கட்டப்படும். இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் பேசினார்.



முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் பங்கேற்பு கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன், முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், மாநில நிர்வாகிகள் பிரபு, ஹென்றி பெருமாள்சாமி, ஆறுமுகநயினார், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், இணைச் செயலாளர் சந்தனம், முன்னாள் எம்.எல்.ஏ. மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும் ஒன்றிய செயலாளர்கள் லட்சுமண பெருமாள், காசிராஜன், அழகேசன், ராஜ் நாராயணன், சௌந்திரபாண்டி, அப்பாத்துரை, தனஞ்செயன், பால்ராஜ், போடு சாமி, தனவதி, ஜவஹர், சண்முகவேல், பகுதி செயலாளர்கள் சேவியர், ஜெய்கணேஷ், சுடலைமணி, மாவட்ட அணி நிர்வாகிகள் விக்னேஷ், நடராஜன், நிலாசந்திரன், பெருமாள், தனராஜ், ராஜா, பிரபாகர், ராஜேந்திரன், துரைசிங், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், வழக்கறிஞர்கள் ஆண்ட்ரூமணி, சுகந்தன், ஆதித்தன், பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ், சங்கர், ஐயப்பன் உள்ளிட்ட வடக்கு, தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பகுதி செயலாளர் முருகன் நன்றியுரை வழங்கினார்.