“திமுகவினரை கைது செய்தால் கட்சியை முடக்கிவிட முடியாது. திமுக அச்சப்படும் கட்சி கிடையாது. தேர்தல் வாக்குறுதியில் கூறிய எந்தத் திட்டங்களும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. முதல்வர் விஜய் பக்குவமாக நடந்து கொண்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை” என்று விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கூறினார்.



தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், அவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாகக் கூறி, விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.



இதையடுத்து கடந்த 20-ம் தேதி மார்க்கண்டேயன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஆகஸ்ட் 3-ம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி சுமதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் மனு தாக்கல் செய்தார்.



மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 3-ம் தேதி மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 4-ம் தேதி அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். மேலும், சட்டப்பேரவை நடைபெறும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.



வெள்ளிக்கிழமை சட்டப்பேரவை நடைபெற்றதால் கையெழுத் திடுவதில் இருந்து விலக்கு பெற்றிருந்த மார்க்கண்டேயன், சனிக்கிழமை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வந்து கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:



“மேற்கு வங்கத்திற்கு 75 சதவீத முதலீடுகள் சென்று விட்டதாகவும், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு முதலீடுகள் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் முதலீடுகள் குறைந்துள்ளன. தமிழகத்திற்கு தொழில் செய்ய வந்தால் வழக்குப் போட்டு விடுவார்களோ என்ற அச்சம் தொழில் முதலீட்டாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.



திமுகவினரை கைது செய்தால் கட்சியை முடக்க முடியுமா? அப்படி எல்லாம் முடக்க முடியாது. திமுக அச்சப்படும் கட்சி கிடையாது. ஜனநாயகத்தில் கருத்துகளை சரியான முறையில் எடுத்து வைக்கக்கூடிய அரசியல் கட்சி திமுக. முதல்வர் விஜய் பக்குவமாக நடந்து கொண்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், இந்த அரசு தீவிரவாதிகளை நடத்துவது போன்று எங்களை நடத்துகிறது. ஜனநாயகத்தின் மிகப்பெரிய தூணாக இருப்பது சட்டமன்றம். அது அடைக்கப்படும் என்று சொன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.



அதற்கான எதிர்வினையை அரசியல் ரீதியாக சந்தித் திருக்கலாம் அல்லது வழக்குப்பதிவு செய்திருக்கலாம். ஆனால், பெரிய தீவிரவாதி போலவும், சர்வதேச குற்றவாளி போலவும் எங்கு திரும்பினாலும் போலீசாரை நிறுத்தி எங்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறார்கள். பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை. மக்கள் எதிர்பார்த்தது பட்ஜெட்டில் இல்லை. ரயிலில் வந்து விடும் என்று நினைத் தார்களோ தெரியவில்லை. வாலியில் இருந்தால்தான் அகப்பைக்குள் வரும். தேர்தல் வாக்குறுதிப்படி கூறிய எந்தவித திட்டங்களும் பட்ஜெட்டில் இல்லை. திமுக தனிப்பெரும் இயக்கம். ஜனநாயகம் எங்கு மறுக்கப்படுகிறதோ அங்கு வெற்றிடம் உருவாகிவிடும்” என்றார்.



சேகர்பாபு தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து



முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை திருத்தணியில் போலீசார் தடுத்து நிறுத்தியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மார்க்கண்டேயன், “பகவான் காத்திருக்கக்கூடிய நிலையை கொடுத்திருக்கிறார். அவர் பக்திமான். பொறுமையாக இருந்து சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்” என்றார்.



சட்டப்பேரவை பேச்சு குறித்து விளக்கம்



வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் தான் பேசிய பேச்சை மறந்து விடுங்கள் என்று சபாநாயகரிடம் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.



அதற்கு மார்க்கண்டேயன், “தூத்துக்குடி மண்ணுக்கு இருக்கும் வேகமும் விவேகமும் நான் சொல்லியிருக்கிறேன். இதை தேவையில்லாமல் சட்டப்பேரவையில் இழுக்க வேண்டாம். நேரத்தை வீணடிப்பதால் மறந்து விடுங்கள் என்று கூறினேன்” என்று விளக்கம் அளித்தார்.



இந்த சந்திப்பின்போது ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், இம்மானுவேல், சுற்றுச்சூழல் அணி துணைத்தலைவர் நைஸ் பரமசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.