தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு கிராமத்தில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக உப்பு உற்பத்தி செய்யப்படும் விவசாய உப்பள நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தும் முயற்சியை மறுபரிசீலனை செய்து, உப்பு உற்பத்தியை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



கோவளம், பசுவந்தரை, தன்பாடு சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் நிர்வாகிகள், அதன் நிறுவனர் தலைவரும் தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை தலைவருமான புலி.செ.இளவரச பாண்டியனை அவரது தலைமை அலுவலகத்தில் சந்தித்து, முள்ளக்காடு பகுதியில் உப்பு உற்பத்தி விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.



அப்போது அவர்கள் அளித்த கோரிக்கையில் கூறியிருப்பதாவது:



எங்கள் சங்கம் சொசைட்டிஸ் ரிஜிஸ்ட்ரேஷன் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட சங்கமாகும். மகாத்மா காந்தியடிகளின் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏற்பட்ட காந்தி – இர்வின் ஒப்பந்தத்திற்குப் பின்னர், முள்ளக்காடு கிராமத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் கடந்த 1937-ம் ஆண்டு முதல் எங்களது மூதாதையர்கள் குடும்பத்துடன் தரிசு நிலங்களை மேம்படுத்தி விவசாய உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர்.



சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு மேடு, பள்ளங்களாக இருந்த கரடு முரடான நிலங்களை எங்களது மூதாதையர்கள் தனித்தனியாக பெரும் செலவு செய்து, உடல் உழைப்புடன் உப்பள பாத்திகளாக மாற்றி உப்பு உற்பத்தி செய்து வந்தனர். தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக அந்த நிலங்களில் உப்பு உற்பத்தி செய்து வருகிறோம். உப்பளத் தொழிலே எங்கள் குடும்பங்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.



முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டும் தளத்திற்காக வெளிநாட்டு நிறுவனத்திற்காக நிலங்கள் கையகப் படுத்தப்பட்டால், ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் டன் உப்பு உற்பத்தி பாதிக்கப்படும். இது தமிழகத்தின் மட்டுமின்றி இந்திய அளவிலான உப்பு உற்பத்தியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். உப்பு விவசாயத்தை சார்ந்துள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதுடன், உப்பை சார்ந்த சில்லறை மற்றும் பெருவணிகமும் பாதிக்கப்படும். தமிழகத்தின் உப்பு தேவைக்காக பிற மாநிலங்களை, குறிப்பாக குஜராத்தை, சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.



முள்ளக்காடு, பழையகாயல் மற்றும் புன்னக்காயல் பகுதிகளில் நடைபெறும் மீன்பிடித் தொழிலும் நிலம் கையகப்படுத்தப்படுவதால் பாதிக்கப்படும். மேலும், முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பல தலைமுறைகளாக உப்பு விவசாயத்திற்காக கடுமையான உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட நிலங்களை வேறு கடற்கரை பகுதிகளில் எளிதாக மாற்றியமைத்து உப்பு உற்பத்தி செய்ய முடியாது.



மேலும், தாமிரபரணி ஆற்றின் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையிலிருந்து வடிகால் வழியாக வரும் பாசன நீர் சிவத்தையாபுரம், பேய்குளம், பழையகாயல், குலையன்கரிசல், அத்திமரப்பட்டி, காலங்கரை உள்ளிட்ட குளங்களில் தேக்கி வைக்கப்படுகிறது. இதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் நெல், வாழை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது.



விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட பின்னர் மீதமுள்ள பாசன நீர் மதிகெட்டான் ஓடை வழியாக கடலில் கலக்கிறது. நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் மழைக்காலங்களில் மதிகெட்டான் ஓடையை சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, மேற்கண்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும்.
தமிழக அரசுக்கு உப்பு விவசாயத்தின் மூலம் வருவாய் ஈட்டும் வகையிலும் நடவடிக்கை எடுக்க முடியும். கையகப் படுத்தப்பட உள்ள முள்ளக்காடு பகுதியில் உள்ள உப்பள நிலங்களில் உப்பு உற்பத்தி மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை அரசுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் செயல்பட தயாராக உள்ளோம். ஏக்கர் ஒன்றுக்கு ஆண்டுதோறும் ரூ.5 ஆயிரம் வரை கட்டுக் குத்தகை செலுத்தவும் தயாராக உள்ளோம்.



எனவே, முள்ளக்காடு பகுதியில் உப்பு உற்பத்தியை நம்பி வாழும் தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்வாதாரம், ஆண்டுதோறும் உற்பத்தியாகும் உப்பின் அளவு, நாட்டிற்கு கிடைக்கும் அந்நியச் செலாவணி, சுற்றுவட்டார விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, உப்பள நிலங்களை கப்பல் கட்டும் தளத்திற்காக கையகப்படுத்தும் முயற்சியை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.



உப்பு உற்பத்தியை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், உப்பள நிலங்களை பாதுகாக்கவும் தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை ஆதரவு அளித்து துணைநிற்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.