தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக சீரான குடிநீர் விநியோகம் இல்லாததால், குடிநீர் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு தண்ணீர் இன்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், வல்லநாடு பகுதியில் நடைபெற்று வரும் பிரதான குடிநீர் குழாய் சீரமைப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, நாளை (9-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை முதல் மாநகராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம் மூலம் தண்ணீர் பெறப்பட்டு வருகிறது. குறிப்பாக கலியாவூரில் இருந்து வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் பிரதான குடிநீர் குழாயில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டு, அதிகளவு குடிநீர் வெளியேறியது.
இதையடுத்து, குழாய் உடைப்பை உடனடியாக சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப் பட்டதால், நேற்று (7-ம் தேதி) குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. மேலும், கொம்புகாரநத்தம் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வருகிற 12-ம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளதால், அன்றைய தினமும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதனால், பொதுமக்கள் தங்களுக்கு கிடைக்கும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி கமிஷனர் ப்ரியங்கா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால், இந்த அறிவிப்பு பொதுமக்கள் அனைவரையும் முழுமையாக சென்றடையாத நிலையில், பலர் வழக்கம்போல் தேவையான அளவு தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், மாநகராட்சி அறிவிப்புக்கு மாறாக தெற்கு மண்டலத்தில் 5-ம் தேதியே குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, 6-ம் தேதி பெயரளவில் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப் பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால், குடிநீர் மட்டுமின்றி வீட்டு உபயோகத்திற்கும் போதிய தண்ணீர் கிடைக்காமல் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதேபோல் மேற்கு மண்டலம், கிழக்கு மண்டலம், வடக்கு மண்டலம் உள்ளிட்ட மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை சீர்படுத்தும் நடவடிக்கையாக வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம் அருகே நடைபெற்று வரும் குடிநீர் குழாய் சீரமைப்புப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, குழாய் சீரமைப்புப் பணிகள் இரவு பகலாக விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்ட மேயர், பணிகளை விரைந்து முடித்து மாநகராட்சி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதுதொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மாநகராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் வழங்கும் வகையில் வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம் அருகில் இரவு பகலாக விரைந்து நடைபெற்று வரும் குடிநீர் குழாய் சீரமைப்புப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன். ஏற்கனவே அறிவித்தபடி பணிகள் முடிவடைந்து, நாளை 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் சீரான குடிநீர் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இதனால், கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வந்த தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நாளை முதல் தீர்வு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.