காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை முழுமையாக மதித்து, தமிழகத்திற்குரிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் வலியுறுத்தியுள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:



உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை அனைத்து தரப்பினரும் முழுமையாக மதிக்க வேண்டும். தமிழகத்திற்குரிய காவிரி நீரை கர்நாடக அரசு உரிய முறையில் திறந்துவிட வேண்டும். சட்டத்தின் ஆட்சி என்பது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதே சட்ட உரிமைகள் கழகத்தின் நிலைப்பாடு.
இந்த விவகாரத்தில் தமிழக அரசும் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் மற்றும் நீர்வள நிபுணர்களை ஒன்றிணைத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும். அந்தக் கூட்டத்தில் ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றி, தமிழகத்தின் உரிமையை வலியுறுத்தி மத்திய அரசிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



காவிரி பிரச்சினையில் அரசியல் வேறுபாடுகளை மறந்து, தமிழகத்தின் நீர் உரிமைக்காக அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய நேரம் இது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் நேரடியாக தொடர்புடைய காவிரி நீர் பிரச்சினையை அரசியல் கண்ணோட்டத்தில் அணுகாமல், உரிமை மற்றும் சட்டத்தின் அடிப்படையில் அணுக வேண்டும்.



மேலும், மேகதாது அணை தொடர்பான எந்த நடவடிக்கையும் தமிழகத்தின் நீர் உரிமையை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது. தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க தேவையான அனைத்து சட்ட மற்றும் அரசியலமைப்பு வழிமுறைகளையும் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.



காவிரி நீர் என்பது அரசியல் பிரச்சினை அல்ல; தமிழகத்தின் வாழ்வுரிமை. எனவே, கட்சிகள் தங்களுக்குள் மோதுவதை நிறுத்திவிட்டு, தமிழகத்தின் நீர் உரிமைக்காக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுத்து போராட வேண்டும். இவ்வாறு சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.