“ஒரு காலத்தில் கோவிலுக்குள் நுழையவும், கல்வி கற்கவும் மறுக்கப்பட்ட நிலையில், ஆதிக்க சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து சுயமரியாதையுடனும் கல்வி வளர்ச்சியுடனும் முன்னேறிய நாடார் சமுதாயத்தினர், தங்களது மகமை சார்பில் பல்வேறு பகுதிகளில் பத்திரகாளியம்மன் கோவில்களை உருவாக்கி வழிபட்டு வருகின்றனர்” என்று முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள பிரையன்ட் நகர் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா கடந்த 6-ம் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பிரையன்ட் நகர் ஐக்கிய நாடார்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு இன்னிசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு காலத்தில் ஆதிக்க சக்திகளின் காரணமாக குறிப்பிட்ட சமூகத்தினர் கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லாத சூழ்நிலை இருந்தது. அந்த காலகட்டத்தில் நாடார் மகமை சார்பில் பத்திரகாளியம்மன் கோவில்கள் உருவாக்கப்பட்டு, சமுதாயத்தின் சார்பில் வழிபாடு நடைபெறும் நிலை உருவானது. இந்தப் பகுதியில் மட்டுமல்லாமல், நாடார் மகமை அமைப்புகள் செயல்படும் பல்வேறு பகுதிகளிலும் பத்திரகாளியம்மன் கோவில்கள் உருவாக்கப்பட்டு மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
அதேபோல் கல்வியும் மறுக்கப்பட்ட காலம் இருந்தது. அதனை மாற்றும் வகையில் நாடார் சமுதாயத்தின் சார்பில் பல்வேறு பகுதிகளில் கல்விக்கூடங்கள் தொடங்கப்பட்டன. கல்வி வளர்ச்சியின் மூலம் சுயமாக தொழில் தொடங்கி, வணிகம் செய்து, அனைத்து துறைகளிலும் நாடார் சமுதாயத்தினர் முன்னேறி வருகின்றனர்.
“நமக்கு சுயமரியாதைதான் முக்கியம்” என்று மறைந்த பேராசிரியர் அன்பழகன் தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதை நினைவுகூர்கிறேன். மறைந்த சௌந்தரபாண்டியனார் இருந்த காலகட்டத்தில் அந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நீதிக்கட்சியின் மூலம் சுயமரியாதையைப் பெற்று அனைவரும் வாழ்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில், அரசியல் கட்சி வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். இன்னிசை கச்சேரி என்பது அனைவருடைய மனதுக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கக்கூடியது. அந்த வகையில், உங்களோடு அமர்ந்து நானும் சிறிது நேரம் இன்னிசை கச்சேரியை கண்டு களித்து செல்ல இருக்கிறேன். அனைவரும் மகிழ்ச்சியாக இருப்போம். இவ்வாறு கீதாஜீவன் பேசினார்.
பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்பு நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், ஐக்கிய நாடார்கள் சங்க தலைவர் பிக்அப் தனபாலன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் பொன்சுகுமார், துணைத்தலைவர் காமராஜ் பாண்டியன், துணைச்செயலாளர் பால்சாமி மற்றும் நிர்வாகிகள் சுப்பையா, பொன் கார்த்திகேயன், அன்பரசன், ஜெயச்சந்திரபிரபாகர், இலட்சுமணன், மாரியப்பன், ஆறுமுகபெருமாள், செல்வக்குமார், முத்துபாண்டி, வெற்றிராஜன், சிவன்குமார், ரூபராஜா, கனிராஜன், ஞானசேகர், ரத்தினவேல், சுயம்புலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் கோவில் தர்மகர்த்தா முத்துராஜன், செயலாளர் சதாசிவன், பொருளாளர் ஐகோர்ட் துரை, கொடை விழா தலைவர் பசுபதி, இணைச் செயலாளர்கள் இசக்கிமுத்து, துரைராஜ், கணேசன், ரத்தினவேல் மற்றும் துணை தர்மகர்த்தாக்கள், துணைச்செயலாளர்கள், சட்ட ஆலோசகர்கள், திமுக நிர்வாகிகள், கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கீதாஜீவனுக்கு புகழாரம் நிகழ்ச்சியில் இன்னிசை கச்சேரி நிர்வாகி சந்திரன் பேசுகையில், “கீதாஜீவனின் தந்தையார் காலத்திலிருந்தே எங்களது நட்பு தொடர்ந்து வருகிறது. கீதாஜீவனைப் பொறுத்தவரை மிகவும் எளிமையாக இருந்து அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர். அனைவருக்கும் உரிய மரியாதையை சமமாக வழங்கக்கூடியவர்.
பொறுப்பில் இருந்தபோது எப்படி சிறப்பாக பணியாற்றி னார்களோ, அதேபோல் தற்போதும் மக்கள் பணிகளை தொய்வின்றி செய்து வருகிறார். பல்வேறு பதவிகளுக்கு கீதாஜீவன் வர வேண்டும். அவரது மக்கள் பணி தொடர்ந்து நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இறைவன் அவருக்கு அருளாசி புரிவார்” என்று புகழாரம் சூட்டினார்.