தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி (தன்னாட்சி) சார்பில், டி.பி. முக்த் பாரத் அபியான் (TB Mukt Bharat Abhiyan) திட்டத்தின் கீழ் “போதைப் பொருட்களுக்கு நோ சொல்லுங்கள்” (Say No To Drugs) என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி முத்துநகர் கடற்கரையில் நடைபெற்றது.
கல்லூரியின் என்.சி.சி. அதிகாரி (ANO) கேப்டன் முனைவர் பி. மேரி பிரியா தலைமையில், 3 பேராசிரியர்கள் மற்றும் 40 என்.சி.சி. மாணவர் படை வீரர்கள் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். முத்துநகர் கடற்கரையில் நேற்று (ஆக.8) மாலை 6 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காசநோய் (TB) ஏற்படுவதற்கான காரணங்கள், பொது இடங்களில் இருமும்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் மற்றும் பொதுவான ஆரோக்கியமான நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களின் மோசமான வாழ்க்கை முறை, அதனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் மற்றும் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து என்.சி.சி. மாணவர்கள் வீதி நாடகம் (Nukkad Natak) மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் நிறைவில், போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதில்லை என்றும், போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்றும் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி (தன்னாட்சி) முதல்வர் அருட்சகோதரி முனைவர் சி. ஷிபானா, கல்லூரி நிர்வாகம் மற்றும் திருநெல்வேலி 3 (TN) பெண்கள் பட்டாலியன் என்.சி.சி. கமாண்டிங் ஆபீசர் லெப்டினன்ட் கர்னல் அமித் கந்தாரி ஆகியோரின் சிறந்த வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.