தூத்துக்குடி கே.வி.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 39-வது ஆண்டு விளையாட்டு விழா, தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தலைவர் கே.எஸ்.எஸ்.ஏ. திராவிட மணி தலைமை தாங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியை மெலிண்டா சூசன் தாமஸ், கடந்த ஆண்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளின் அறிக்கையை வாசித்து, வரவேற்புரை வழங்கினார்.



விழாவில் சிறப்பு விருந்தினராக வ.உ.சி. துறைமுக விளையாட்டுக் கழகச் செயலாளர் எம்.ஆர். தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டார். அவர் சமாதானப் புறாக்களைப் பறக்கவிட்டு, மாணவ, மாணவிகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு, விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.



விளையாட்டு விழாவில் மாணவ, மாணவிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஓட்டப்பந்தயம், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட 14 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தினர்.



போட்டிகளில் அதிக அளவில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெற்று, 105 புள்ளிகள் எடுத்த மாணவ, மாணவிகள் முதலிடம் பிடித்தனர். அவர்களுக்கு கே.வி.எஸ். பள்ளி கேடயத்தை பள்ளித் தலைவர் கே.எஸ்.எஸ்.ஏ. திராவிட மணி, செயலாளர் டி.ஆர். தமிழரசு, பொருளாளர் டி.ஆர். பாலமுருகன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.



மேலும், போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விழா நிறைவில் பள்ளித் துணை தலைமை ஆசிரியை கிறிஸ்டோமெல் மேத்தா நன்றி கூறினார்.