தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆசிரியர் பணிக்கான தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றும் பணி கிடைக்காமல் தவித்து வருவதாகக் கூறி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்தித்து தங்களது வேதனையை தெரிவித்தனர்.



அப்போது அவர்கள் கூறியதாவது:



கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஆசிரியர் பணிக்கான தேர்வுகளை தொடர்ந்து எழுதி, ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்று வருகிறோம். கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற நியமனத் தேர்விலும் நாங்கள் வெற்றி பெற்றோம். ஆனால், இதுவரை எங்களுக்கு பணி வழங்கப்படவில்லை.



தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதையும் மீறி சுமார் 20 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.



ஆசிரியர் பணிக்காக பல ஆண்டுகள் படித்து தேர்வில் வெற்றி பெற்றும் வேலை கிடைக்காததால், பலர் வேறு சாதாரண வேலைகளுக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிலர் 100 நாள் வேலைக்கும் சென்று வருகிறார்கள். தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு சென்றாலும் மாதம் ரூ.6 ஆயிரம் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுவதாகவும், அந்த தொகையை வைத்து குடும்பத்தை நடத்த முடியாத நிலை இருப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.



இதுதொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும், மனுவை பெற்றுக்கொண்டோம் அல்லது நிராகரிக்கப்பட்டது என்ற பதிலே கிடைக்கிறது. ஆனால், இதுவரை தங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என்று கூறினர்.



மேலும், 21 ஆயிரத்து 515 பேர் நியமனத் தேர்வு எழுதி ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். இவர்களில் பலருக்கு தற்போது 45 வயதைக் கடந்துவிட்டதாகவும், வயது வரம்பை கருத்தில் கொண்டு ஆசிரியர் பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.



தொடர்ந்து பல ஆண்டுகளாக தேர்வெழுதி காத்திருக்கும் தங்களது நிலையை கருத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.



“விஜய் அண்ணா, உங்களை நம்பித்தான் உங்களுக்கு வாக்களித்தோம். எங்களை உங்கள் தங்கைகளாக நினைத்து, எங்களின் நீண்டகால பிரச்சினைக்கு நல்ல தீர்வு காண வேண்டும்” என்று இடைநிலை ஆசிரியர்கள் வேதனையுடன் வேண்டுகோள் விடுத்தனர்.