தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கொசுப்புழு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் அனைத்து வார்டுகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.



மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா உத்தரவின்படியும், மாநகர நகர் நல அலுவலர் கணேஷ் அறிவுரையின்படியும் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மேற்கு மண்டலத் திற்குட்பட்ட 18-வது வார்டு (பிரிவு 12) ராஜகோபால் நகர் 10-வது தெருவில் 132 குடியிருப்புகள், 11 காலி மனைகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள 2 கிலோமீட்டர் தொலைவிலான பகுதிகளில் மாநகராட்சி களப்பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது, கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் பிளாஸ்டிக் பாட்டில்கள், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள், தேங்காய் ஓடுகள், டயர்கள், பாக்கு மட்டைத் தட்டுகள், பெயிண்ட் டப்பாக்கள், உடைந்த குடங்கள், பழைய காலணிகள், இளநீர் கூடுகள், பிரியாணி சால்னா டப்பாக்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் கண்டறியப்பட்டன.



ஆய்வு செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து மொத்தம் 395 கிலோ கொசு உற்பத்தி மூலங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன. மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு முறையாக உள்ளதா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.



மேற்கு மண்டலப் பகுதிகளில் ‘Indoor/Outdoor Fogging’ முறையில் கொசு ஒழிப்பு புகைமருந்து அடிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. ராஜகோபால் நகர் 10-வது தெருவில் உள்ள டிஎன்டீ காலனி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளனவா என்பது குறித்து சுகாதாரப் பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.



இத்தகைய கொசுப்புழு ஒழிப்பு, தூய்மைப் பணிகள் மற்றும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் தொடர்ந்து நடைபெற உள்ளன. எனவே, ஆய்வு மற்றும் தூய்மைப் பணிகளுக்காக வீடுகள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு வரும் மாநகராட்சி களப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா கேட்டுக் கொண்டுள்ளார்.