தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரமாக நியாயவிலைக் கடைகளில் சர்வர் மற்றும் இணையதள இணைப்பு முறையாக செயல்படாததால், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கும் கடை பணியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களின் ஸ்மார்ட் கார்டு விவரங்கள் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்ட பின்னரே அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஒவ்வொரு நியாயவிலைக் கடைக்கும் தனித்தனியாக சர்வர் வசதியும், இணையதள இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தூத்துக்குடியில் பல்வேறு நியாயவிலைக் கடைகளில் சர்வர் மற்றும் இணையதள இணைப்பு முறையாக செயல்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஒரு நாளில் ஒரு கடைக்கு சுமார் 2 முதல் 6 ஸ்மார்ட் கார்டுகள் மட்டுமே பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்ய முடிவதாகவும், அதன் பின்னர் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்படுவதாகவும் கடை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் பொருட்கள் வாங்குவதற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பொதுமக்கள், பயோமெட்ரிக் பதிவு செய்ய முடியாததால் பொருட்கள் வழங்கப்படாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கும் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கும் இடையே தினமும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
சர்வர் மற்றும் இணையதள இணைப்பு தங்களது கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில், பொதுமக்களின் கோபத்தையும் அதிருப்தியையும் கடை பணியாளர்களே எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பல கடைகளில் மோதல் ஏற்படும் சூழல் உருவாகி வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் மட்டும் சுமார் 115 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், சர்வர் மற்றும் இணையதள இணைப்பு பிரச்சினைக்கு தமிழக அரசு உடனடியாக நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என நியாயவிலைக் கடை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி பெற்றுச் செல்லவும், கடை பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தேவையற்ற வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்படுவதைத் தடுக்கவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.