தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, “சுதந்திர நாட்டில் ஜனநாயகத்தின் நிலை? அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதில் நமது பங்கு?” என்ற தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது.



கருத்தரங்கிற்கு மக்கள் சிவில் உரிமை கழகத்தின் மாவட்டத் தலைவர் முனைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். முன்னாள் செயலாளரும், மாநிலக் குழு உறுப்பினருமான பேராசிரியை பாத்திமா பாபு முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ராஜா வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வழக்கறிஞர் பிரிட்டோ கருத்துரையாற்றினார்.



அப்போது, அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள அடிப்படை உரிமைகள் மட்டுமின்றி, ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விதிமுறைகள் மற்றும் சட்டக் குறிப்புகள் குறித்தும் விரிவாக விளக்கினார்.



மேலும், அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக கருத்தரங்கில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் வழக்கறிஞர் பிரிட்டோ விளக்கம் அளித்தார். இதன் மூலம் பங்கேற்பாளர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம் மற்றும் குடிமக்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது.



தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் வழக்கறிஞர் பிரிட்டோவுக்கு மக்கள் சிவில் உரிமை கழகத்தின் மாவட்டத் தலைவர் முனைவர் செல்வராஜ் மற்றும் பேராசிரியை பாத்திமா பாபு ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ராஜா நன்றி கூறினார்.