விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாததையும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டத் தவெக அரசு மெத்தனம் காட்டுவதாகவும் கண்டித்து, அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே 14.08.2026 அன்று காலை 11 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய எஸ்.பி.சண்முகநாதன் கூறியதாவது: “தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் 5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் முழு விவசாயக் கடனும் ரத்து செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத விவசாயக் கடன் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்தது. ஆனால் தற்போது வெறும் ரூ.75 ஆயிரம் மட்டும் தள்ளுபடி செய்துவிட்டு விவசாயிகளை ஏமாற்றி வஞ்சித்து வருகிறது.
தேர்தலுக்கு முன்பு ஒரு நிலைப்பாடும், தேர்தலுக்குப் பிறகு வேறு நிலைப்பாடும் முதலமைச்சர் விஜய் எடுத்துவருகிறார் என்பதற்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டே சாட்சி. இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம்.
மேகதாது பகுதியில் கர்நாடக அரசு காவிரிக்கு குறுக்கே புதிய அணை கட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் காவிரி பாசனப் பகுதிகள் பாலைவனமாகும் நிலை ஏற்படும். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காவிரி மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி, உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று தமிழகத்தின் காவிரி உரிமையை நிலைநாட்டி விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க வழிவகுத்தார். ஆனால் தற்போதைய தவெக அரசு அதனை முறையாக சுட்டிக்காட்டாமல், சட்டப்பேரவையில் புதிதாக தீர்மானம் கொண்டு வருவது போன்ற நாடகத்தை நடத்தி வருகிறது.
விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும். காவிரி நீரில் தமிழகத்திற்கான உரிமையை மீட்டெடுக்க வேண்டும். அந்த உரிமையை பெற்றுத் தந்தவர் புரட்சித்தலைவி அம்மா. அந்த உரிமையின் அடிப்படையில் மத்திய அரசிடம் போராடி தமிழகத்திற்கான தண்ணீரைப் பெற முடியாத அவலநிலையில் பொம்மை முதல்வராக விஜய் இருந்து கொண்டிருக்கிறார்.
தவெக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சி அமைந்திருந்தால், கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தபடி அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூ.10 ஆயிரம் வந்திருக்கும். மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 கிடைத்திருக்கும். காவிரியில் தமிழகத்தின் உரிமையும் நிலைநாட்டப்பட்டிருக்கும்” என்றார்.
அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தும் நான்கு பேர் மீது நடவடிக்கை தேவை: சிங்காரம் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிங்காரம் பேசுகையில், அதிமுகவில் இருந்து வெற்றி பெற்று ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த சிலர், கட்சித் தகவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவி பறிபோகும் என்ற அச்சத்தில் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் மன்னிப்பு கடிதம் அளித்து மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.
“மீண்டும் கட்சியில் இணைந்தவர்கள் ஒற்றுமையாக செயல்படாமல் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார்.
அதிமுக தற்போது ஆளும் கட்சியாக இல்லாவிட்டாலும், விவசாயிகள் மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து களத்தில் போராடி வருகிறது. பல ஆண்டுகளாக மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை அனுபவித்துவிட்டு தற்போது கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை.
எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விசுவநாதன், கே.பி.அன்பழகன் ஆகிய நான்கு பேரும் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இவர்களை கட்சியில் இருந்து நீக்கினாலே பல்வேறு குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கி, புரட்சித்தலைவி அம்மாவால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. அதிமுக ஏழை, எளிய, சாமானிய மக்களின் கட்சி. வேறு கட்சிக்கு செல்வது என்று முடிவு செய்திருந்தால், இவர்களாகவே வெளியேற வேண்டும்” என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்புசாரா ஓட்டுநர் இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அவைத் தலைவர்கள் திருப்பாற்கடல், முன்னாள் எம்.எல்.ஏ. என்.கே.பெருமாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்கள் இரா.ஹென்றி, செங்கான், கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் முடிமண் ராமசாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் முஸ்தப்பா, முன்னாள் சேர்மன் வசந்தாமணி, மாவட்ட பொருளாளர் சேவியர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும், சார்பு அணியினர், ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.